Published : 20,Jul 2020 10:25 AM

கோபப்படுவது நார்மலா அல்லது அப்நார்மலா? மனநல மருத்துவர் கூறுவதென்ன?

how-anger-problems-affect-your-health

கோபம் வருவது தவறா? உங்களுக்கு வரும் கோபத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கோபம் பலமா? பலவீனமா? தேவையானதா அல்லது தேவையற்றதா? நார்மலா அல்லது அப்நார்மலா?  என்பது குறித்து விளக்குகிறார் மனநல மருத்துவரான சிவபாலன்.

image

‘’கோபம் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான உணர்ச்சி. மனிதன் என்பவன் என்னதான் தன்னை சமூகப்படுத்திக் கொண்டாலும் அடிப்படையில் அவன் ஒரு விலங்கு. தனது இருப்பை தக்கவைத்து கொள்வதுதான் எல்லா விலங்குகளுக்கும் அடிப்படை பண்பு.

தனது இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டுமானால் நம்முடைய ஆபத்துகளை எதிர்த்து நாம் போராடியே ஆக வேண்டும். அதற்கு என்ன தேவை? உடல் பலம் மட்டும் அதற்கு போதாது. ஒரு மன தைரியம் வேண்டும், ஒரு முனைப்பு வேண்டும்.

image

உணவுக்காக இன்னொரு உயிரினத்தை எதிர்ப்பது வேறு, நம்மை காப்பாற்றி கொள்ள இன்னொரு உயிரினத்தை எதிர்ப்பது வேறு. இரண்டும் வேறு வேறு போராட்டம். நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் ஒரு அளவற்ற மன தைரியம் வேண்டும், அதை எப்படி பெறுவது? அதற்கு தான் கோபம் அவசியம்.

ஒரு எல்லையற்ற கோபம் தான், நம்மை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும். ஒரு உயிரினம் (நம்மையும் சேர்த்துதான்) கோபப்படும் போது ‘அட்ரினலின்’ என்னும் ஹார்மோன் அதனுள் சுரக்கிறது. அது தான் அந்த உயிரினம் போராடுவதற்கு தேவையான ஆற்றலை அந்த நேரத்தில் வழங்கும்.

அட்ரினலின் ஹார்மோன் நமக்கு கொடுக்கும் ஆற்றலை வைத்து நாம் இரண்டு வகையான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஒன்று ஆபத்தை எதிர்த்து போராடுவது (Fight) அல்லது அங்கிருந்து தப்பித்து ஒடி விடுவது (Flight). இதில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை தேர்ந்தெடுப்பதின் மூலம் நாம் ஆபத்தில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.

கோபமே வரவில்லையென்றால்? அட்ரினலினும் சுரக்காது, போராடுவதற்கு உரிய ஆற்றலும் கிடைக்காது. இப்போது புரிகிறதா கோபம் எவ்வளவு முக்கியமென்று!

எனது நண்பர் கேட்டார் “என்ன டாக்டர், கோபப்படக் கூடாது என்பதற்காக தான் மாதம் பத்தாயிரம் கட்டி காலை, மாலை என யோகா போய்ட்டு இருக்கேன். நீங்க என்னடானா கோபப்பட வேண்டும் என சொல்றீங்க” என்றார்.

அவரிடம் நான் கேட்டேன், “கோபப்படாமல் அல்லது கோபமே வராமல் ஒரு மனிதனால் இருக்க முடியுமா?” என்றேன். கோபம் என்பது ஒரு அடிப்படை உணர்ச்சி. உணர்ச்சிகளை நம்மால் என்ன செய்ய முடியும்? நிறுத்த முடியுமா? மனம் என்று இருந்தால் இது போன்ற உணர்ச்சிகளும் வரத்தானே செய்யும். அது தானே இயல்பு?

உதாரணத்திற்கு நுரையீரல் என்று ஒன்று இருக்கும் வரையில் நமக்கு சுவாசம் இருக்கத்தானே செய்யும்? அது போலதான், மனம் என்ற ஒன்று இருக்கும் வரையில் உணர்ச்சிகள் வரத்தான் செய்யும். நாம் உணர்ச்சியற்றவர்களாக மாற வேண்டும் என்றால், நமது மனதை கழட்டி தூர எறிந்தால் தான் முடியும்.

உணர்ச்சி என்பது வேறு. அதை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது வேறு. கோபம் என்பது வேறு, கோபம் வரும் போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது வேறு.

கோபப்படலாம் அது இயல்பு, இயற்கை. ஆனால் அந்த கோபத்தை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம்? கோபத்தை சார்ந்த நமது நடவடிக்கைகள், எண்ணங்கள், வெளிப்படுத்தும் முறைகள் இவை தான் ஆபத்தானது. கோபப்படுவது அல்ல.

மாற்றி கொள்ள வேண்டியது நமது நடவடிக்கைகளை தானே தவிர கோபத்தை அல்ல. ஒரு கையறு நிலையில் நாம் இருக்கும் போது கோபம் வரலாம், அது இன்னொருவர் மீது வரலாம் அல்லது நம் மீதே வரலாம். அப்படி வரும் போது நாம் அதை முன்பே கணிக்க வேண்டும்.

கோபத்தில் நமது வார்த்தைகளும், நடவடிக்கைகளும் நமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும். ஏனென்றால் கோபமான மனநிலை என்பது தற்காலிகமானது தான். ஆனால் அப்போது வெளிப்படும் நமது வார்த்தைகளும் செய்கைகளும் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய வல்லமை உடையது.

எந்த சூழ்நிலையில் நான் கோபப்படுவேன், நான் கோபப்பட்டால் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நாம் முன்பே கணித்திருக்க வேண்டும். எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என நினைக்கிறேன்? எனது எந்த செயலுக்கு நான் அதிகமாக வருந்துகிறேன்? என்றெல்லாம் நாம் ஒவ்வொரு முறை கோபப்படும் போதும், அதன் பின்னரும் யோசிக்க வேண்டும்.

அந்த சூழ்நிலை வரும் போது கோபப்படக்கூடாது என நினைக்க வேண்டாம். எனது கோபத்தை நான் சென்ற முறை போல மிக மோசமாக வெளிப்படுத்தக் கூடாது என நினைத்தால் போதும். முக்கியமாக கோபமான மன நிலையில் நீங்கள் இருக்கும் போது எந்த முடிவும் எடுத்து விடவே கூடாது.

அதே போலவே மற்றவர்களின் கோபத்தையும் கணிக்க வேண்டும். ஒருவர் கோபத்தில் சொல்லும் வார்த்தைகளுக்கும், செய்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் போதும். இது தான் உங்களுக்கு உண்மையான பக்குவத்தை கொடுக்கும். முதிர்ச்சி என்பது கோபத்தை கடந்த நிலை அல்ல. கோபத்தை புரிந்துகொண்ட நிலை.’’

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்