[X] Close

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி?: உஷார் டிப்ஸ்..

சிறப்புச் செய்திகள்

dengue-fever-prevention-tips

தமிழகத்தில் தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு  காய்ச்சல் அதிகமாகப் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். இச்சூழலில் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? எப்படி என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா.


Advertisement

image

டெங்கு எனும் நோய் ஃப்ளாவி வைரஸ் (Flavi virus) எனும் தீநுண்மியால் வரும் நோயாகும். டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது.


Advertisement

டெங்குவின் அறிகுறிகள்

  1. கடுமையான காய்ச்சல் (101 டிகிரிக்கும் மேல்)
  2. தலைவலி
  3. உடல் அசதி
  4. உடல் வலி
  5. வாந்தி
  6. வயிற்றுப்போக்கு
  7. வயிற்று வலி
  8. உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றும்

முதல் மூன்று நாட்கள் கடும் ஜூரம் அடித்து அதற்கடுத்த நாள் உள்ளங்கை கால் பாதம் குளிர்ந்து போகும் தன்மை தென்பட்டால் வந்திருப்பது டெங்குவாக இருக்கலாம். இந்த நோயின் முதல் மூன்று நாட்கள் febrile phase என்று அழைக்கப்படும். அடுத்த மூன்று நாட்கள் critical phase. அதன் பிறகு Recovery phase.

அதிகமாக காய்ச்சல் அடிக்கும் போது சுதாரித்து நீராகாரங்களை கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ் திரவத்தை கொடுக்க வேண்டும். உண்ண குடிக்க முடியாத அளவு காய்ச்சல் இருந்தால் ரத்தநாளம் வழியாக திரவங்களை ஏற்ற வேண்டும்.


Advertisement

அதற்கடுத்த மூன்று நாட்களில் தான் ரத்த நாளங்களில் அதிக நீரிழிப்பு ஏற்படும். மேலும் ப்ளாஸ்மா எனும் நீர்மச்சத்து அதிகமாக ரத்த நாளங்களை விட்டு வெளியேறி விடும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து முறையாக ரத்த ஓட்டத்தை பேண இயலாமல் பல முக்கிய உறுப்புகளும் செயலிழந்து விடும். கூடவே வைரஸுடன் நடக்கும் போர்களத்தில் தட்டணுக்கள் உடைபடும். அவற்றால் அதன் வேலையான ரத்தத்தை உறைய வைக்கும் வேலையை செய்ய முடியாது. இதனால் ரத்த நாளங்களில் இருந்தும் ரத்தக்கசிவு ஏற்பட்டு நிலைமையின் தீவிரத்தை கூட்டி விடும்.

டெங்குவில் மூன்று வகை உண்டு. 1 .சாதாரண டெங்கு ஜூரம், 2. உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம், 3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம்.

இதில் முதல் வகை வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி என்று இருக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது

இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, ரத்த தட்டணுக்களை ( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் , மலத்தில் சிறுநீரில் ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்

அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்.

ரத்தத்தில் எலிசா (ELIZA) எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம்.

டெங்குவிற்கான சிகிச்சை முறை

டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும். ஓ.ஆர்.எஸ் எனும் திரவத்தை காய்ச்சல் பாதித்த நோயாளிகள் அதிகமாக பருக வேண்டும்.

வாயால் பருக இயலாதவர்களுக்கு, சிறை (ரத்த நாளங்கள்) வழியாக மருத்துவமனையில் திரவங்களை ஏற்ற வேண்டும்.

காய்ச்சலை குறைக்க பாராசிடமால் மாத்திரை போதுமானது.

குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும்.

டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியம் இல்லை.

மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.

காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும். அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும்

image

டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது?

மிக மிக எளிது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது. ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும்.

வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள், சிரட்டைகள் , இளநீர் கூடுகள் எதையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள். தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்.

தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும். மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும் கட்டாயம் கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும்

இந்த இரண்டு விசயங்களை கடைபிடித்தால் பல தொற்றும் நோய்கள் நமக்கு வருவதை தவிர்க்கலாம்.

டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும் . டெங்குவை வருமுன் தடுப்பது மிக எளிது.’’


Advertisement

Advertisement
[X] Close