Published : 18,Jul 2020 04:57 PM

’உலக அழகி முதல் ஹாலிவுட் சினிமா வரை’: வெற்றிக்கொடி நாட்டிய பிரியங்கா சோப்ரா..!

From-Backward-State-to-Hollywood-Priyanka-Chopra-s-Birthday-Today

இன்று முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான  பிரியங்கா சோப்ராவின் 38 வது பிறந்தநாள், அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பள்ளி பாடப்புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்ட முதல் இந்திய நடிகை, உலகமே உற்று நோக்கிய இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணத்தில் கலந்துகொண்ட ஒரே பாலிவுட் நடிகை, இந்திய நடிகைகளில் ஹாலிவுட் முகமாக உலகளவில் புகழடைந்த ஒரே நடிகை போன்ற பல்வேறு பெருமைகளுக்கு உரியவர் பிரியங்கா சோப்ரா.

image

பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தின் அசோக் சோப்ரா, மது சோப்ரா மருத்துவத் தம்பதிகளின் மூத்த மகளாக 1982 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி பிறந்தார். வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்ல; தென்னிந்திய மாநில மக்களும் பிரியங்கா சோப்ராவை சொந்தம் கொண்டாடலாம். ஏனென்றால், அவரது அம்மா மது சோப்ரா கேரளாவைச் சேர்ந்தவர். அவரது, அப்பா ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்ததால் வெளிமாநிலங்களுக்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார்.

பிரியங்கா சோப்ராவின் படிப்பும் மாநிலம் மாநிலமாக மாறிக்கொண்டே இருந்தது. பள்ளிப்படிப்பின்போதே மாடலிங் துறை மீதான ஆர்வம்தான், ஃபேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தையும் வெல்ல வைத்தது.கடந்த 2000 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது உலக அழகி பட்டம் வென்றார். இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்ற ஐந்தாவது பெண் இவர்.

image

குடும்பத்தினருடன் பிரியங்கா சோப்ரா

தமிழகத்திற்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்று அவர், ஹாலிவுட் நடிகையாக இருந்தாலும் முதல்முதலில், நடிகையாக 2002 ல்  ‘தமிழன்’ படத்தில்தான் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். விஜய்யுடன் சேர்ந்து அதேப்படத்தில் ’உள்ளத்தை கிள்ளாதே’ பாடலையும் பாடி அசத்தியிருக்கிறார். தமிழன் பட ஷூட்டிங்கின்போது அடிக்கடி பாடல்களை முணு முணுத்திருக்கிறார். ’வாவ்.. செம்மையா பாடுறீங்களே. நீங்களே பாடிடுங்களேன்’ என்று விஜய்தான் பிரியங்காவை பாடவைத்திருக்கிறார். விஜய் கொடுத்த ஊக்கம்தான் அடுத்தடுத்து பாடும் வாய்ப்பையும் பிரியங்காவுக்கு  உருவாக்கிக்கொடுத்தது.

அதற்கு அடுத்த ஆண்டில்தான், பாலிவுட்டில்  ‘தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை’ படத்தில் அறிமுகமானார்.  இப்படம், எதிர்பார்த்த அளவுக்கு பேசப்படாததால், இரண்டாவது படமான  ‘ஆண்டாஸ்’ படம்தான் வணிகரீதியாக ஹிட் அடித்ததோடு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பிரியங்கா சோப்ராவுக்கு வாங்கிக்கொடுத்தது. அதற்கடுத்தடுத்து நடித்த படங்கள் மெகா ஹிட் அடிக்கவே, பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆனார். இதுவரை 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின்  ஃபேஷன், பர்ஃபி, மேரிகோம் ஆகிய படங்கள், அவரது அபாரத் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்தது.

2008 ஆம் ஆண்டு வெளியான ஃபேஷன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய  விருதையும் பெறவைத்தது. 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் கொடுத்து மத்திய அரசு சிறப்பு செய்தது. நடிப்பிற்காக மட்டுமல்ல; அவர் தயாரித்தப் படங்களும் தேசிய விருதுகளை வென்றுள்ளது. தனது ‘பர்பில் பெப்பல் பிக்சர்ஸ்’ மூலம் 10 க்கு மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். அதில், பானி, வெண்டிலேட்டர் படங்கள் தேசிய விருதுகளை வென்றது. மராட்டிய மொழிப் படமான ’வெண்டிலேட்டர்’ மட்டுமே மூன்று தேசிய விருதுகளை அள்ளிக்குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடர்களிலும், படங்களிலும் நடித்து உலகளவில் புகழ்பெற்றார்.

காதலுக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்து தன்னைவிட 10 வயது வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் ஏஞ்சலாக குடியேறியுள்ளார். அங்கு, 20,000 சதுர அடியில் 144 கோடி ரூபாயில் தங்கள் காதல் இல்லத்தை கட்டமைத்துள்ளார்.

image

காதல் கணவருடன்

பிரியங்கா சோப்ராவின் பிறந்தநாளையொட்டி பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், சோனம் கபூர், அனுஷ்கா சர்மா, ஹீமா குரேஷி ஆகியோர் இன்று சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார் என்பதே இவரது திறமைக்கு அங்கீகாரம். ஆஸ்கர் விருது, ஆஸ்கருக்கு நிகராக வழங்கப்படும் கோல்டன் குளோப்ஸ் விருது, எம்மி விருதுகளையும் வழங்க அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த ஜூலை மாதம் பிரியங்காவுக்கு ஸ்பெஷல் மாதம் என்றே சொல்லலாம். இவரது பிறந்தநாள் மட்டுமல்ல, இவரது ஒரே செல்லத்தம்பி சித்தார்த் சோப்ராவின் பிறந்தநாளும் இதே ஜூலை மாதத்தில்தான். அதுமட்டுமல்ல, இவரது நிச்சயதார்த்தம் நடந்ததும் ஜூலை மாதம்தான்.

image

 தனது தம்பி சித்தார்த் சோப்ராவுடன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்