
சேலம் மாவட்டத்தில் முழு ஊடரங்கு என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வேகமாக பரவும் நிலையில் அதுகுறித்து ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில் "சேலம் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. இத்தவறான செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்.
இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு சேலம் மாவட்டத்தில் வருகின்ற 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழைமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
இதைத்தவிர பிற நாட்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அரசின் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.