Published : 17,Jul 2020 03:47 PM

கணினிவழி சிபிஎஸ்இ தேர்வில் வென்ற தமிழகத்தின் முதல் பார்வை மாற்றுத்திறன் மாணவி ஓவியா.!

Differently-abled-girl--who-passed-computer-based-CBSE-exam

நெய்வேலியில் பொறியாளராகப் பணியாற்றும் விஜயராஜ் – கோகிலா தம்பதியின் மகள் ஓவியா, சிறு வயது முதலே படிப்படிப்பாக பார்வைத் திறனை இழந்தவர். ஏழாம் வகுப்புப் படிக்கும்போது முழுமையாக பார்வையிழந்த இந்த மாணவி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வை கணினிவழி எழுதி 447 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நெய்வேலியில் உள்ள ஜவஹர் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் அவர் படித்துவருகிறார்.

பார்வைக் குறைபாடுள்ள மாணவர்கள் கணினிவழியாக தேர்வுகளை எழுதலாம் என சிபிஎஸ்இ அனுமதியளித்த நிலையில், தமிழகத்தில் கணினிவழி பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வெற்றிபெற்ற முதல் பார்வை மாற்றுத்திறன் மாணவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஓவியா. 

“எங்க மகளுக்கு நான்கு வயதிலேயே பார்வைக் குறைபாடு ஆரம்பித்தது. ஆர்பி எனப்படும் பார்வைக்குறைபாட்டால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். பார்வை மெல்ல மெல்ல குறைந்துவந்தது. ஏழாம் வகுப்பு வரும்போது  முழுமையாக பார்வையே தெரியவில்லை. சென்னையில் மூன்றாவது படிக்கும்போது டைப்ரைட்டிங் பயிற்சியளிக்கத் தொடங்கினோம். சாதாரண பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்து படிக்கவைத்தோம். அப்போது ஸ்கீரின் ரீடர் சாப்ட்வேர் மூலம் லேப்டாப்பில் தட்டச்சு செய்யலாம் என்பதை நண்பர் சங்கர்சுப்பையா தெரிவித்தார். அன்று முதல் தட்டச்சுப் பயிற்சியைத் தொடங்கினார் ஓவியா” என்கிறார் அவரது தந்தை விஜயராஜ்.

image

நெய்வேலிக்குத் திரும்பியதும் ஐந்தாம் வகுப்பில் மகளைச் சேர்த்தார்கள்.  தினமும் வகுப்புக்கு லேப்டாப் எடுத்துச் சென்று பாடங்களை அதில் டைப் செய்துகொள்வார். கணக்குப் பாடத்தை மட்டும் மனதில் வாங்கிக்கொள்வார். வீட்டில் வந்து பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதை வழக்கமாக வைத்துக்கொண்டார் ஓவியா. இன்று அவரே தன்னிச்சையாக யாருடைய உதவியுமின்றி கணினிவழியில் தேர்வுகளை எழுதியுள்ளார்.  

இதற்கு முன்பு இந்திய அளவில் டெல்லி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த கார்த்திக் ஷானே என்ற மாணவர் தேர்வு எழுதினார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த அவர், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். அந்த இளைஞர்தான் ஓவியாவுக்கு ரோல்மாடலாக இருந்திருக்கிறார். சென்னையில் அவரை நேரிலும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.  

“எங்கப் பொண்ணை ஹாஸ்டல்ல தங்கவைச்சு படிக்க விரும்பவில்லை. எல்லோரையும்போல சாதாரணப் பள்ளியில்தான் படிக்கவைத்தோம். பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் விரும்புவதும் அதைத்தான். அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளை அனுமதிக்கவேண்டும். அவர்களும் மற்றவர்களைப்போல இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும். அதற்கு சமூகமும் அரசும் முன்வரவேண்டும் என ஒரு தாயாக வேண்டுகிறேன்” என்று நெகிழ்வுடன் பேசுகிறார் ஓவியாவின் தாய் கோகிலா.

பார்வையற்றோருக்கான பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மையமான கர்ணவித்யா பவுண்டேசன் கெளரவச் செயலர் பேராசிரியர் ரகுராமன், “பார்வை மாற்றுத்திறனாளிகள் கணினிவழி தேர்வுகளை எழுத தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் கணினிவழிக் கல்வியில் முறையான பயிற்சியை வழங்கவேண்டும். இந்தப் பயிற்சிக்கான  தரத்தையும், தரஅளவுகோல்களையும் சிறந்த வல்லுநர்கள் கொண்ட அமைப்பின்  வழியாக  நிர்ணயிக்கவேண்டும். இதுபோன்ற  பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு பள்ளி அல்லது கல்லூரியில் சிறிய மதிப்பெண்ணை பயிற்சி முடித்த பிறகு வழங்கலாம்” என்ற ஆலோசனையை முன்வைக்கிறார்.

ஓவியா என்ன சொல்கிறார்: ”என் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்த என் பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னைப்போல பார்வைத் திறனற்ற மற்ற மாணவர்களும் கணினிவழித் தேர்வு எழுத முயற்சி செய்யவேண்டும்” என்றார்.

சுந்தரபுத்தன்  

 

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்