[X] Close

‘சிறப்பான கதைத் தேர்வு.. தொடர் வெற்றிகள்’ கெத்து காட்டி வரும் விஷ்ணு விஷால்..!

சினிமா,சிறப்புச் செய்திகள்

Actor-vishnu-vishal---Birthday

தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடக்கும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது., ஒரு காலத்தில் தோற்றத்தில் சாமானிய மக்களைப் போல அல்லாத சிகப்பு அழகு கொண்டவர்களாக கருதப்பட்டவர்களே ஹீரோக்களாக இருந்தனர்., ஆனால் அவர்கள் சாமானியர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தனர். உதாரணமாக எம்.ஜி.ஆர்., உழைக்கும் மக்களின் தொழில்களான ரிக்‌ஷா இழுப்பது, மரம் வெட்டுவது, விவசாயி, கூலி தொழிலாளி உள்ளிட்ட கதாபாத்திரங்களை செய்து
அசத்தினார்.,


Advertisement

பிறகு ஆக்சன் ஹீரோக்களின் காலம் வந்தது., நல்ல கட்டு மஸ்தான உடல்., வில்லன்களை புரட்டி எடுக்கும் ஸ்டைலில் ஹீரோக்கள் உருவாகினர்., விஜயகாந்த்., அர்ஜூன் போன்றோரை இவ்வகையில் குறிப்பிடலாம். இவர்கள் கருப்பு சிவப்பு என என்ன நிறத்தில் இருந்தாலும் மக்கள் இவர்களது ஆக்சன் கட்சிகளுக்காகவே இவர்களை ரசித்தனர். ரஜினி கமல் இருவரும் இவ்விரு வகைமையிலும் மாறுபட்டவர்கள்.

image


Advertisement

பிறகு தனுஷ் காலம்., துள்ளுவதோ இளமை வெளியான போது., தனுஷின் உடல் வாகு குறித்து எழுந்த விமர்சனங்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தன. ஆனால், அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவர் தன் உழைப்பால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். பிறகு எல்லோரும் ’தனுஷ் பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கான் பா’ என பேசும் அளவிற்கு அது ஒரு ட்ரண்டாகவே ஆகிப் போனது. அதன் பிறகு இந்த பக்கத்து வீட்டு பையன் போலான தோற்றமுள்ள நாயகர்களுக்கு இன்று
வரை நல்ல மார்க்கெட் உள்ளது.

தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராக நடிகர் விஷ்ணு விஷாலைக் குறிப்பிடலாம்., மேல் சொன்ன அத்தனை வகையான ஹீரோக்களின் சாராம்சமும் தன் ஒருவருக்குள் கொண்டுள்ளவர் விஷ்ணு விஷால்., நல்ல சிவப்பு நிறமுடைய ஹீரோ., பக்கத்து வீட்டுப் பையன், கிராமத்து ஹீரோ, காவல் துறை அதிகாரி, மாடர்ன் ஹீரோ என விஷ்ணு விஷாலுக்கு என்ன வேஷம் போட்டாலும் அது பொறுத்தமாகவே இருக்கும். ஒரு நடிகருக்கு முதல் தகுதியே தோற்றம் தான்., தோற்றம் என்பது கருப்பு
சிவப்பு என நிறம் குறித்தல்ல. அவர் எந்த வேஷத்தை ஏற்று நடித்தாலும் அதற்கு அவரது முகமும் உடலும் பொறுத்தமாக இருப்பது. இத்தகுதிக்கு விஷ்ணு விஷால் முதன்மையானவர்.

image


Advertisement

விஷ்ணு விஷாலின் சினிவா வாழ்க்கைக்கு துவக்கப் புள்ளியாக வெண்ணிலா கபடிக் குழு அமைந்தது., சுசீந்திரன் இயக்கத்தில் தான் நடித்த முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்தார் அவர். வெண்ணிலா கபடிக்குழுவில் விஷ்ணு விஷால் ஏற்று நடித்த கதாபாத்திரம் மாரிமுத்து. மாரி என அவரை அழைப்பார்கள். முதல் படமே ஒரு ஹீரோவுக்கு இப்படி வெயிட்டாக அமைவது அதிர்ஷ்டம் எனலாம்.

ஒரு சராசரி கிராமத்து இளைஞன் உள்ளூர் கபடி குழுவில் இணைந்து தீவிரமாக கபடி ஆடுகிறார்., இன்றும் கிராமங்களில் புரையோடிக் கிடக்கும் சாதிய அடக்குமுறைகளையும், அது தனிமனிதர்கள் மீது செலுத்தும் அதிகாரத்தையும் இப்படம் பேசியிருக்கும். இப்படத்தின் மையகருத்து இதுவல்ல என்றாலும் கூட தமிழில் மிக முக்கியமான சினிமா வெண்ணிலா கபடிக் குழு. ஜாலி, கேலி, காதல், விளையாட்டு என ஒரு கமர்ஸியல் ஹீரோவாக பின்னாளில் விஷ்ணு விஷால் உருவாக அவர் தேர்வு செய்த அக்கதாபாத்திரம் முக்கியமானது. தன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வது ஒரு ஹீரோவுக்கு மிக முக்கியம்., அதனை விஷ்ணு விஷால் சரியாகச் செய்து வந்திருக்கிறார். தமிழ் படத்தில் ஒரு ப்ரோடகனிஸ்டை பட்டியலினத்தை சேர்ந்தவராக, எளிய அன்பின் மனிதராக சித்தரித்தது அதுவே முதல் முறை எனலாம். அதற்கு முன்னும் பின்னும் பல சினிமாக்கள் பட்டியலின மக்களை ரவுடிகளாக, திருடர்களாக சித்தரித்திருக்கிறது., தற்போது அந்த சூழல் மெல்ல மாறி வருகிறது என்றாலும் கூட., இந்த மாற்றத்திற்கான விதை மாரி முத்து போட்டது., வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் எதிர் அணியில் கபடி வீரனாக விஜய் சேதுபதி தலை காட்டுவார்.

image

வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் மாரி மற்றும் அவனது நண்பர்கள் கபடி விளையாடிக் கொண்டு இருக்கும் போது அவ்வழியாக நடந்து போகும் ஒருவர் டீம் கேப்டனின் தந்தையிடம் “என்னயா உன் மகன் கண்ட சாதி பயலுக கூட சேந்து விளையாடுறான்” என்பார்., இப்படியொரு கேள்வி மீண்டும் இன்னொரு காட்சியில் வரும். விஷ்ணு விஷால் நடித்த ஜீவா திரைப்படமும் சாதி எப்படி ஒரு இளைஞனின் விளையாட்டு கனவை கலைத்து அவனை முன்னேற விடாமல் கொலை செய்து என பேசி இருக்கும். இவ்விரு படங்களையும் குறிப்பிடக் காரணம் விஷ்ணு விஷால் எனும் நாயகன் தனக்கான கதைகளை எப்படி சரியாக தேர்வு செய்கிறார் என்று சொல்லவே. இது ஒரு நாயகனின் முக்கியத் தகுதிகளில் ஒன்று. இதே போல விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கத்தில் மாவீரன் கிட்டு என்றொரு சினிமாவில் நடித்தார். இத்திரைப்படம் 2016ஆம் ஆண்டு வெளியானது. பட்டியலின மக்களின் பிரச்னைகளை அழுத்தமாக பேசியிருக்கும் இப்படம். விஷ்ணு விஷாலில் சினிமா கேரியரில் என்றென்றும் குறிப்பிடத்தக்க ஒன்று.

image

இப்படியான அழுத்தமான ஜானர்களை விஷ்ணு விஷால் ஏற்று நடித்தாலும்., இதற்கு அப்படியே எதிர் திசையிலும் அவர் பயணித்திருக்கிறார். அதுவும் ஒரே நேரத்தில் இவற்றை நிகழ்த்தி இருக்கிறார் என்பது தான் ஆச்சர்யம். மாவீரன் கிட்டு வெளியான அதே வருடம் வேலைனு வந்துட்டா வெள்ளக் காரன் என்ற சினிமாவை அவர் தயாரித்து நடித்தார்., பக்கா கமர்ஸியல் சினிமாவான இது விஷ்ணு விஷாலின் இமேஜை அனைத்து செண்டர் ரசிகர்களுக்கும் கொண்டு சேர்த்தது. இதைப் போலவே சிலுக்குவார் பட்டி சிங்கம், பலே பாண்டியா போன்ற சினிமாக்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர இவர் தேர்வு செய்து அசத்தினார்.

விஷ்ணு விஷாலில் அட்டகாசமான தகுதியாக மீண்டும் மீண்டும் ஒன்றைச் சொல்வதானால் அவரது கதைத் தேர்வு, சினிமாவில் காலடி எடுத்து வைத்து பதினொரு வருடங்களே ஆகிறது., ஆனால் அவர் பல ஜானர்களில் நடித்துவிட்டார், குள்ள நரிக் கூட்டம் திரைப்படத்தில் அவர் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து பையனாக நடித்திருப்பார்.

image

இன்று நேற்று நாளை என்ற சயின்ஸ் பிக்சன் படம் விஷ்ணு விஷாலுக்கு ஐஸ்கிரீம் தலையில் ஜெர்ரிப் பழம் போல அமைந்தது., காரணம் அதுவரை சயின்ஸ் பிக்சன் படங்கள் என்றாலே வேற்று மொழிப் படங்களாக இருக்கும். தமிழில் வந்தாலும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும்., ஆனால் தமிழில் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் அனைத்து செண்டர் ரசிகர்களுக்கும் புரியும் படியாக அமைந்தது என்று சொன்னால் அது ரவிக்குமார் இயக்கிய இன்று நேற்று நாளை என்ற சினிமா தான். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியானது.

விஷ்ணு விஷாலின் தேர்வில் முண்டாசுபட்டியும் பாஸ்மார்க் வாங்கியது., பல பீரியட் படங்கள் வரலாறு குறித்தே பேசும். ஆனால் முண்டாசு பட்டி ஒரு பீரியட் நகைச்சுவைப் படமாக அமைந்தது., அதற்கு முன்பாக சமகாலத்திலிருந்து சில தசாப்தங்கள் முன் சென்று கதை சொன்ன சுப்ரமணிய புரம் வேறு வகை சினிமா., ஆனால் அதே தொணியில் சமகாலத்திலிருந்து சில தசாப்தங்கள் பின்னே சென்று காலத்தை மறு கட்டமைப்பு செய்து ஒரு அழகான நகைச்சுவைப் படமாக உருவானது என்றால் அது முண்டாசு பட்டி தான். விஷ்ணு விஷாலை நுட்பமாக கவனித்தால் இது போல பல முதன் முதல்களுக்கான க்ரெடிட்டை அவர் சைலண்ட்டாக தன்னகத்தே வைத்திருக்கிறார். முண்டாசுபட்டி திரைப்படத்தை இயக்குநர் ராம் குமார் இயக்கியிருந்தார். ராட்சசன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் அருண் குமாரைப் போல., வெண்ணிலா கபடிக் குழுவின் மாரி இல்லை. மாவீரன் கிட்டுவைப் போல இன்று நேற்று நாளை இளங்கோ இல்லை, ஜீவாவைப் போல நீர்ப்பறவையில் இருளப்ப சாமி இல்லை.

image

இப்படி தனது ஒவ்வொரு படத்திலும் தன் மீது ஒரு பிம்பத்தை உருவாக்கி அடுத்த கதை மற்றும் கதாபாத்திரத் தேர்வில் அதனை உடைத்தும் விடுவார் விஷ்ணு விஷால்., தமிழின் முன்னனி நடிகர்கள் கூட எடுக்கத் துணியாத முடிவுகளை விஷ்ணு விஷால் வெகு இயல்பாக எடுக்கிறார். 2012ல் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான நீர்ப்பறவை இவரது துணிச்சலுக்கு மற்றுமொரு சாட்சி. வெண்ணிலா கபடிக் குழுவிலாவது இவர் ஆரம்ப நிலை நடிகர்., ஆனால் நீர்ப்பறவை வெளியான போது விஷ்ணு விஷால்
வெற்றிவானில் சிறகடித்துக் கொண்டிருந்தார். “சார் இந்த படத்துல நீங்க ஒரு மொடா குடிகாரன் சார்” என ஒரு இயக்குநர் முன்னணி நடிகரிடம் கதை சொன்னால் அதனை ஒருவர் எப்படி ஏற்றுக் கொள்வார்...? ஆனால் விஷ்ணு விஷால் ஏற்றுக் கொண்டு நீர்ப்பறவையில் நடித்தார். காரணம் அந்தக் கதை மீதான விஷ்ணு விஷாலின் நுட்பமான பார்வை. தனக்கு இப்படத்தில் என்ன இடம் என்பதை எப்போதும் இரண்டாம் இடத்தில் வைத்து விட்டு. இந்தக் கதை தனக்கு எப்படிப் பொருந்தும் அதனை ரசிகர்களிடம் எப்படி
கொண்டு சேர்ப்பது என்ற பார்வைக்கு முதலிடம் கொடுத்து சிந்திக்கிறவர் தான் விஷ்ணு விஷால்., இப்படியான நடிகர்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்வின் துன்பங்களை எல்லாம் ஓரமாக வைத்து விட்டு வெற்றியின் வானில் சிலுக்குவார்பட்டி சிங்கம் போல ஜாலியாக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். இன்று அவருடைய பிறந்தநாள்., வானம் தொட வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால்.


Advertisement

Advertisement
[X] Close