[X] Close

ஜாதிக் கலவரத்தால் தொலைந்துப்போன தூத்துக்குடி மாவட்டத்தின் கிராமம் !

மாவட்டம்,சிறப்புச் செய்திகள்

The-story-of-a-ruined-village-in-Thoothukudi-district

மனிதர்களின்றி உருக்குலைந்து கிடக்கிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சேதுராமலிங்கபுதூர் கிராமம்!

தோல்வார் பூட்டப்பட்ட குதிரையைப் போல் நேராக செல்லும் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் பயணித்தால் செக்காரக்குடி என்று ஒரு பதாகை இடதுபுறம் நம்மை வழியனுப்புகிறது. அந்தச் சாலையில் இருந்து 15 கி.மீ சென்றடைந்ததும், வலதுபுறமாக திரும்பி சிறிதுதூரம் சென்றால் சேதுராமலிங்கபுதூர் வந்துவிடும் என்பது நமக்கு வழிகூறியவர் சொன்ன ரூட். அதன்படி வலதுபுறம் திரும்பினோம். 

அதுவொரு மனித அரவமற்ற முள்காட்டுச் சாலை. புதிதாக சாலை அமைத்து குறைந்தது 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பது கண்கூடு. ஒருபுறம், ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமான சாலை நமது வண்டியைப் பதம் பார்க்க, மறுபுறம் கூரிய முட்செடிகள் உடலை சீண்டிப்பார்க்க, சிணுங்கிக்கொண்டே ஊர்ந்துச் செல்கிறது ‘டூவிலர்’. இரண்டரை கி.மீ. தூர இந்த ரணகள பயணத்திற்குப் பின் நம்மை ‘புதர்களோடு’ வரவேற்கிறது சேதுராமலிங்கபுதூர்.image


Advertisement

‘சேதுராமலிங்கபுதூர்’ என்பது அதிகாரப்பூர்வ பெயர். ஆனால் சுற்றுக்கிராம மக்கள் இக்கிராமத்தை ‘காட்டுப்புதூர்’ என்றே அழைக்கின்றனர். சரிதான். கால் வைக்கும் இடமெங்கும் முட்களும், புதர்களுமாக உருக்குலைந்து அந்நியப்பட்டு நிற்கிறது சேதுராமலிங்கபுதூர்.கிராமம் எங்கும் ஒரே நிசப்தம்; இரண்டு எட்டு எடுத்து வைத்ததும் நடக்கும் காலடி சப்தம் மண்ணில் பட்டு எதிரொலிக்க, திடுதிப்பென்று அகவல் ஒலி எழுப்பியபடி அங்குமிங்கும் பதறிச் சிதறுகின்றன மயில்கள்; மயான அமைதியில் ஒரு சலசலப்பு ஏற்படுத்துமே ஒரு பயம், நாம் சென்றிருந்தது மழைநேரம் என்பதால் தூரத்தில் இரண்டு மயில்கள் தோகை விரித்து அழகாக அசைந்துக் கொண்டிருந்ததைக் கண்டபோது மனம் சற்று லேசானது போன்ற ஆசுவாசம்.

கிராமங்களில் வேற்று ஆள் நுழையும்போது, ‘’என்னப்ப, யார் வீட்டுக்குப் போகணும்?’’ என்று பெரிசுகள் அக்கறையுடன் கேட்பார்களே, அப்படிப்பட்ட விசாரிப்புகளை எல்லாம் கேட்க நாதியில்லை. திரும்பும் திசையெங்கும் கைவிடப்பட்ட வீடுகள்; ஆட்கள் இல்லாததால் வீட்டிற்குள்ளும், வாசலிலும் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. பெரும்பாலான வீடுகள் இடிந்து நொறுங்கிக் கிடக்கின்றன; ஒன்றிரண்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி இடியும் நிலையில் உள்ளன. சில வீடுகள் கருவேல மரங்களுக்கிடையே ஒளிந்து நிற்கின்றன. மக்கள் விட்டுச்சென்ற வீடுகள் இப்போது மயில்கள், கீரிப்பிள்ளைகள், முயல்கள் என ஏதோதோ சிற்றுயிர்களின் உறைவிடமாக மாறிப்போயிருக்கிறது. 

ஊரின் துவக்கத்தில் அமைந்துள்ள உச்சினி மாகாளி அம்மன் கோயில், மையப்பகுதியில் அரசு கட்டிக்கொடுத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இவை இரண்டு மட்டும் கம்பீரமாக நிற்கின்றது; கோவிலுக்கு எதிரே அமைந்திருக்கும் தானியங்கள் உலர்த்தும் களம் பயனற்றுக் கிடக்கிறது; மக்கள் பொதுவாக பயன்படுத்திய ஒரு பெரிய ஆட்டு உரல் கிராமத்தின் மையப்பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது; மழலைக் குழந்தைகள் துள்ளித்திரிந்து கல்விப் பயின்ற அரசு தொடக்கப்பள்ளி கால்நடைகள் இளைப்பாறும் இடமாக காட்சியளிக்கின்றது; மின்கம்பங்களில் இணைப்பு துண்டிக்கப்பட்டு வெறுங்கம்பங்களாக நிற்கின்றன. 


Advertisement

மொத்ததில் மண்ணின் மக்கள் வாழ்ந்த நினைவுகளை புதைத்து வைத்து மவுனியாக நிற்கிறது சேதுராமலிங்கபுதூர். 2002-03 வரைக்கும்கூட மக்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக நிற்கிறது அந்த ஆண்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி. மற்றபடி மக்கள் எப்போது காலி செய்தார்கள் என அக்கம்பக்கத்தில் உள்ள கிராமவாசிகளிடம் விசாரித்தால், ‘பத்து வருஷத்துக்கு முன்னாடியே எல்லோரும் காலிபண்ணிட்டு போயிட்டாங்க’ என்கிறார்கள்.

image

சேதுராமலிங்கபுதூரில் வாழ்ந்த இருவரிடம் செல்போனில் தொடர்புகொண்டு, ‘’எதற்காக ஊரைவிட்டு காலி செய்தீர்கள்?’’ என விசாரித்தோம். இருவருமே சொல்லி வைத்தாற்போல் பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்றபடி பேசத் தொடங்கினார்கள்.

‘’சுத்துப்பட்டு நாலு கிராமங்கள்ல சேதுராமலிங்கபுதூர் தான் செழிப்பான கிராமம். ரெண்டு பெரிய விவசாயப் பண்ணை இருந்தது. மூணு போகம் விளைஞ்ச மண் அது. சுத்து கிராமத்துக்காரங்க எல்லாம் சேதுராமலிங்கபுதூருக்கு வந்து கூலி விவசாயம் பார்த்து பிழைப்பு நடத்துனாங்க. மொத்தம் 65 குடும்பங்கள் இருந்தது. நாலு சாதி ஆட்கள் இருந்தாங்க. ஒற்றுமையாக இருப்போம். பொங்கல் பண்டிகை, திருவிழா, நல்ல காரியம், கெட்ட காரியம் எல்லாத்துலயும் ஒண்ணா இருந்து சந்தோஷமா காலத்தை ஓட்டுனோம். ஆனால் பாழாப்போன அந்த ஜாதிக் கலவரம் எங்க ஊர் அழியறதுக்கு முக்கிய காரணமாக அமைஞ்சிடுச்சு. 

1996 வாக்கில நெல்லை மாவட்டத்தில பெரிய ஜாதிக்கலவரம் மூண்டுச்சு. அது படிப்படியா பரவி தூத்துக்குடி மாவட்ட கிராமங்களிலும் எதிரொலிச்சுது. இப்படித்தான் சேதுராமலிங்கபுதூர்ல தந்தை, மகன் ரெண்டு பேர வெட்டிக் கொன்னுப் போட்டாங்க. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு முக்கால்வாசி மக்கள் கிராமத்தை காலி பண்ணிட்டு வேறவேற ஊர்களுக்குப் போயிட்டாங்க. 

சில வருஷத்துக்குப் பிறகு பக்கத்தூர்ல இருந்து எங்க கிராமத்துக்கு திருட வந்த ஒருத்தன், ஒரு ஆள வெட்டிக் கொன்னுட்டு நகையை திருடி இருக்கான். இதை ஒரு மூணு பேர் பார்த்துட்டாங்க. வெளியே சொல்லிருவாங்களோனு ஸ்பாட்டிலேயே அந்த மூணு பேரையும் வெட்டிக் கொன்னுட்டான். ஒரே நேரத்துல நாலு பேர் வெட்டுப்பட்டு செத்தது எங்களுக்கு அதிர்ச்சியா இருந்தது. அடுத்த ஒருசில நாள்களேயே மிச்சமிருந்த கொஞ்ச மக்களும் ஊரை காலி பண்ணிட்டு போயிட்டாங்க. அதுல போனவங்கதான் திரும்பி யாரும் எட்டிக்கூடப் பார்க்கல. அத்தோட சேதுராமலிங்கபுதூர் கிராமத்தோட அத்தியாயம் முடிஞ்சுது.

தவிர, சாலை வசதி, பஸ் வசதி ஒன்னும் கிடையாது. காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க அங்க இருந்து பக்கத்துல இருக்கிற பூவாணி கிராமத்துக்கு 3 கி.மீ. நடந்தே போவோம். அதனால்தான் சேதுராமலிங்கபுதூர் என்கிற எங்க ஊரை ‘காட்டுப்புதூர்’ன்னு சொல்லுவாங்க. அவசரத்துக்கோ, நைட் நேரமோ வெளியூர் போயிட்டு வர்றது ரொம்ப சிரமம். அதனால் போனவங்க யாருமே திரும்பிவர விரும்பல. 

நாங்க பிறந்து வாழ்ந்த கிராமத்தை பார்க்க ஆசையிருக்காதா என்ன? ஊர்ல விவசாய நிலம் அப்படியே கிடக்குது. கீழப்பூவாணி ஊர்ல இருந்து சேதுராமலிங்கபுதூர் வழியா செக்காரக்குடி வரைக்கும் தார் சாலை அமைச்சு கொடுத்தாங்கானா ஊருக்கு வந்து விவசாயமாவது பார்ப்போம். நாள்போக்கில யாராவது மறுபடியும் குடிபெயரவும் வாய்ப்பிருக்குது. ஒருத்தர் ரெண்டுபேர் வந்தாங்கனா ஒவ்வொருத்தார வர ஆரம்பிப்பாங்க’’  என்று கூறும் அவர்களது வார்த்தைகளில் ஊர்ப்பாசம் அமிழ்ந்திருந்தது. 

சேதுராமலிங்கபுதூரில் இருந்து கிளம்பும்முன் கிராமத்தை ஆழ்ந்து நோக்குறோம். கன்றைப் பிரிந்து கதறும் பசு போல் உள்ளுக்குள் விம்மிக் கொண்டிருந்தது. ஆவணங்களில் மட்டுமல்ல சொந்த மக்களின் மனதிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது சேதுராமலிங்கபுதூர். வாழ்ந்த சுவடுகள் அழிந்துப் போகலாம். நினைவுகளை அழிக்க முடியுமா?

 


Advertisement

Advertisement
[X] Close