Published : 23,Jun 2017 04:52 AM
ஒரு புக்கிங் கூட இல்லை: கேன்சல் ஆனார் காஸ்ட்லி ’மகாராஜா’!

ஒரு புக்கிங் கூட இல்லாததால் சனிக்கிழமை மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்வதாக இருந்த மகாராஜா ரயில் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே ’மகாராஜா எக்ஸ்பிரஸ்’ என்ற சொகுசு ரயிலை உருவாக்கியுள்ளது. ஏழு நட்சத்திர ஓட்டலில் உள்ள சகல வசதிகளோடும் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நவீன வசதிகொண்ட 23 பெட்டிகள் உண்டு. மொத்தம் 84 பேர் பயணம் செய்யலாம். 14 விருந்தினர் பெட்டிகளும், 20 டீலக்ஸ் பெட்டிகள், 18 ஜூனியர் சூட், 1 பிரஸிடென்ஷியல் சூட் ஆகியவை உள்ளன. அனைத்து கேபின்களிலும் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, வைப்ஃபை, சாட்டிலைட் சேனல் மற்றும் டிவிடியுடன் தொலைக்காட்சி, தொலைபேசி, ரெஸ்டாரன்ட், பார், விளையாட்டரங்கம் ஆகியவை அறியப்படுகின்றன. சாப்பாடுகள் தங்கத்தட்டில் வழங்கப்படும்.
8 நாள் சுற்றுலாவுக்கு ரூ. 5 லட்சம், ஜூனியர் சொகுசு சூட் ரூ.7 லட்சம், தனி சூட் ரூ.10.09 லட்சம், பிரசிடென்சியல் சூட் ரூ.17.33 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு புதிய வழித் தடங்களில் இயக்க ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக நாளை மும்பையில் இருந்து கோவா, ஹம்பி, மைசூர், எர்ணாகுளம், குமரகம், திருவனந்தபுரம் ஆகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் விதமாக, இந்த ரயில் தொடங்கப்பட இருந்தது. தொடர்ந்து செட்டிநாடு, மகாபலிபுரம், மைசூர், ஹம்பி, கோவா சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வழித்தடத்தில் ஜூலை 1-ம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ரயில் நாளை மும்பையில் இருந்து கிளம்ப வேண்டும். ஆனால், இதுவரை ஒரு புக்கிங் கூட ஆகவில்லை. இவ்வளவுக்கும், ஒரு டிக்கெட் புக் பண்ணினால் ஒரு டிக்கெட் இலவசம் என அறிவித்தும் இந்த நிலைமை. திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை வருவதற்கு 15 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக ’மகாராஜா’வின் பயணம் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் டைரக்டர் ஜெனரல் அனில்குமார் சக்சேனா கூறும்போது, ‘மும்பையில் இருந்து நாளையும் ஜூலை 1-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்தும் மகாராஜா ரயில் தொடங்கப்பட இருந்தது. இப்போது அது கேன்சல் செய்யப்பட்டு விட்டது. செப்டம்பரில் இதை செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம். அதற்கு முன்னதாக, இந்த ரயில் பற்றி விளம்பரபடுத்த உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.