[X] Close

ஆன்லைன்வழி கற்றலில் மாற்றங்கள்: காலத்தின் தேவையா ?

கல்வி&வேலைவாய்ப்பு

Changes-in-Online-education--Is-need-of-our-time-

கொரோனா காலத்தில் கல்விக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன்வழியில் பாடம் படித்துவருகிறார்கள். பள்ளிச் சிறுவர்கள் பல மணி  நேரம் தொடர்ந்து வகுப்புகளில் இருந்து வருகிறார்கள். ஆன்லைன்வழிக் கல்வியில் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள், செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறார் ஐபிஎம் இந்தியா நிறுவனத்தின் (லேர்னிங்  அண்ட் டெவலப்மெண்ட்) துணை மேலாளர் கார்குழலி.

எந்த வயதிலிருந்து கற்பிக்கும் ஆசிரியரை நேரில் பார்க்காமல் அவர் சொல்லித்தருவதை குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ளமுடியும்? ஏற்கனவே வறுமையிலும் அடிப்படை வசதியின்றி வாடும் மாணவர்களுக்கு இது சாத்தியமா? வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்  எப்படி எதிர்கொள்வார்கள் ? இதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.  ஏற்கனவே கல்வி நிபுணர்களும் ஆர்வலர்களும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில், இது வரையிலும் ஆன்லைன்வழிக் கற்றல் பெரும்பாலும் வயதுவந்தோருக்கான கற்றல் வழிமுறையாகத்தான் இருந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அது ஓர் இணை அல்லது துணை கற்றல்முறையாகத்தான் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆசிரியரிடமிருந்து நேரடி வகுப்புகளின் மூலம் கற்பதுதான் முதன்மையானதாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை.


Advertisement

 

image

எங்கே பிறந்தது ஆன்லைன்வழி கல்வி? 


Advertisement

இணையவழிக் கற்றல், வீடியோ கருத்தரங்கச் செயலி என்பதெல்லாம் ஏதோ இந்த கொரோனா நெருக்கடியினால் அவதாரம் எடுத்திருக்கும் புதிய வழிமுறைகள் அல்ல. மின்வழிக்கல்வி அல்லது மின்கற்றல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரின்போது ராணுவத்தினருக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. வீட்டுக் கணினி இந்தியாவுக்குள் நுழைந்தபோது மின்வழிக் கற்றலும் கூடவே நுழைந்தது. மெல்ல அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு ஒவ்வொரு நிலையிலும் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது.

இ லேர்னிங்

மின்வழிக்கற்றலில் (eLearning) நேர்முகப் பயிற்சி (face-to-face training), பயிற்றுநர் வழிநடத்தும் கற்றல் (instructor-led training), இணையவழிக் கற்றல் (web-based training), கணினிவழிக் கற்றல் (computer-based learning), இணைப்புக் கற்றல் (blended learning), செயற்பாட்டு வழிக் கற்றல் (activity-based learning), விளையாட்டுவழிக் கற்றல் (game-based learning), பாவிப்பு (simulation) என்ற பல வழிமுறைகள் அடங்கும். அதில் ஒன்றுதான் இணையவழிக் கற்றல். சரி, இவற்றுள் எந்தக் கற்றல் முறை சிறந்தது? எல்லா முறைகளும் சிறந்தவைதான். கற்பிக்கவேண்டிய பாடம், கற்கும் மாணவர்களின் பின்னணி, பயன்பாடு, நிறுவனத்தின் நிதி ஒதுக்கீடு இவற்றைப் பொறுத்துத்தான் கற்றல் வழிமுறையைத் தெரிவு செய்வார்கள்.

தொழில்நுட்பத்திறன் அல்லது சாஃப்ட் ஸ்கில்ஸ் வளர்க்கும் பயிற்சிகள் பயிற்சியாளர் வழிநடத்தும் கற்றலாக நேரடியாக நடைபெறும். முக்கியமான கோட்பாடுகளைக் கற்றுத்தருவதோடு செயல்முறைப் பயிற்சி, அன்றாடப் பணியில் எங்கே எப்படி எப்போது பயன்படுத்தவேண்டும் என்று நடைமுறையில் செயலாற்றுவது குறித்தும் சொல்லித்தரப்படும்.

அதே பாடத்திட்டமா?

நேரடி வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு நட்பிழை பின்னப்பட்டு நன்மதிப்பு தோன்றி, கற்றுக்கொள்ளும் ஊக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எல்லோரும் ஒன்றுகூடமுடியாத நெருக்கடி நிலையில் இந்தப் பயிற்சிகளை எப்படி நடத்துவது என்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பாடம் மற்றும் பயிற்சித்திட்டம், ஆசிரியர், மாணவர்கள் எல்லோரும் தயார். நேர்முகப்பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அப்படியே இணைய கருத்தரங்க ஆப்ஸ்  வழியாக நடத்திவிடலாமே என்று சொல்லலாம், செய்தும் பார்க்கலாம். ஆனால் பயிற்சியை நடத்தினோம் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர, மாணவர்கள் பயன்பெற்றார்களா என்பதை உறுதியுடன் சொல்லமுடியாது.

நேரில் ஒன்றைச் சொல்வதற்கும் செய்வதற்கும் இணையத்தின் வழியாக நடைமுறைப்படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு.  எடுத்துக்காட்டாக, மாணவர்களின் உடல்மொழியை வைத்தே சொல்வதைப் புரிந்துகொண்டார்களா இல்லையா என்பதை ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார். கவனம் கலைகிறது என்றால், உடனடியாக நகைச்சுவையாக எதையாவது சொல்லி மீண்டும் தன்னைக் கவனிக்கச் செய்வார். அயர்ச்சியாக இருப்பதுபோலத் தெரிந்தால், தேநீர் இடைவேளையை சில மணித்துளிகள் முன்னதாகவே அறிவிப்பார். இதெற்கெல்லாம் இணையவழி வகுப்பில் சாத்தியம் குறைவு. மாணவர்கள் நீங்கள் சொல்வதைக் கவனம் சிதறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற அனுமானத்தில்தான் பாடம் நடத்தவேண்டிவரும்.

 

image

தொழில்நுட்பம்

ரெடியா?

முதலில் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பு, எந்தவிதமான பயிற்சிக்கு எந்தச் செயலியைப் பயன்படுத்தினால் அதிக பயனைத் தரும் என்பதைக் கணிக்கவேண்டும். தற்போதைய நிலையில் புதிய செயலிகளை வாங்குவதில் முதலீடு செய்யமுடியாது. அடுத்து எந்தெந்தப் பாடங்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்பதை வரிசைப்படுத்த  வேண்டும். ஒரே நேரத்தில் மாற்றியமைப்பது சாத்தியமில்லை.  தேவையுமில்லை. நெருக்கடி நிலைமை இன்னும் சில மாதங்களில் மாறிவிடலாம். அதுவரை அந்தப் பாடங்களைப் பயிற்றுவிக்கும் அவசரமில்லை என்றால், அவற்றில் முதலீடு செய்யும் நிதியும் மனித உழைப்பு நேரமும் வீணாகிவிடும்.

எல்லோரும் வீட்டிலிருந்து பணி செய்யும் இந்தக் காலகட்டத்தில் இணைய இணைப்பின் தரம், திடம், அலைவரிசை சரியாக இருக்கிறதா, பயிற்சி நேரத்தின்போது மின்தடையில்லாமல் இருக்கிறதா, சுற்றிலும் கவனத்தைச் சிதறவைக்கும் விஷயங்கள் நடக்காமல் இருக்கிறதா எனப் பல விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நேர்முக வகுப்பில் வெற்றிபெற்ற செயல்முறைகள் எல்லாமே இணையவழிக் கற்றலில் எடுபடும் என்று சொல்லமுடியாது. நேர்முக வகுப்புகளில் மாணவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து சில செயல்முறைகளைச் செய்துபார்ப்பார்கள். அதுகுறித்து மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள். கேள்வி நேரமும் ஆசிரியரின் விளக்கமும் இடம்பெறும். ஒருசில இணையவழிக் கருத்தரங்க செயலிகளில் இதுபோன்ற சிறு குழுக்களை உருவாக்கிச் செயல்படவைப்பது சாத்தியம்தான்.

image

புதையல் வேட்டை

விளையாட்டுகளின் வழியாக முக்கியமான கோட்பாடுகளைக் கற்றுத்தருவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, 'புதையல் வேட்டை' என்ற விளையாட்டு. புதையலைத் தேடும் பூதங்கள்போல நிறுவனத்தின் தளம் முழுவதும் தேடியலைந்து குறிப்பிட்ட தகவல்களையும் பொருட்களையும் சேகரித்துக்கொண்டு வரவேண்டும். அலுவலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் புகுந்துசென்று முகமறியாத சக பணியாளர்களோடு பேசவேண்டிவரும். தனியாகவோ குழுவாகவோ எப்படி விளையாடினாலும் சுவாரசியமான விளையாட்டு இது. இதுபோன்ற பயிற்சி முறைகளின் வடிவமைப்பையே இணையவழிக் கற்றலுக்கு ஏற்றாற்போல மாற்றி வடிவமைக்க வேண்டியது அவசியம்.

யாருமில்லாத அறையில்….

நாம் முன்பே சொன்னதைப் போல,  யாருமில்லாத அறையில் கணினியின் முன் உட்கார்ந்து தொடர்ந்து ஒரு குரலையே கேட்டுக்கொண்டிருப்பது அயர்ச்சியைத் தரும். மனம் வேறு களிப்பூட்டும் விஷயங்களை இணையத்தில் நாடலாம் அல்லது நம்மையறியாமல் சில நொடிகள் கண்ணை மூடிவிடலாம். இதற்காக அவ்வப்போது மாணவர்களின் கவனத்தை ஈர்த்துத் தக்கவைத்துக்கொள்ளவும் உற்சாகமூட்டவும் சில உத்திகளைப் பின்பற்றவேண்டும்.

வகுப்பறையில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் பயிற்சி நடக்கும். இணையவழிக் கற்றலில் இத்தனை நேரம் செலவுசெய்ய யாராலும் முடியாது. எனவே பாடத்தைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றையும், ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட வயதுவந்தோருக்கான கற்பிக்கும் உத்திகளைப் பயன்படுத்தி மாற்றியமைக்கவேண்டும். இதனால் மாணவர்களும் சலிப்பின்றிப் பாடங்களைக் கற்கமுடியும்.

மாற்றங்கள் தேவை

அனைத்துப் பாடங்களையும் முடித்ததும் மாணவர்கள் இணையவழித் தேர்வுகளை எழுதுவார்கள்.  இவற்றைப் பெரும்பாலும் அதற்கென கட்டமைக்கப்பட்ட சிறப்புக் கணினியில் ஆசிரியரின் முன்னிலையில் எதிர்கொள்வார்கள். பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிசெய்யும் இந்த நேரத்தில் இதைச் செயல்படுத்தும் சாத்தியம் குறைவுதான். இதற்காகக் கற்றல் வழிமுறையோடு தேர்வுமுறையையும் மாற்றியமைக்க வேண்டும்.

ஏற்கனவே கைவசமிருக்கும் பாடத்தை அப்படியே இணையத்தின் வழியாக நடத்துவதென்பது 'ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்' என்பதைப்போல அபத்தமான செயலாகும். நிறுவனங்கள் வடிவமைப்பை மாற்ற நிதி ஒதுக்கீட்டுடன் பயிற்றுமுறை வடிவமைப்பு மற்றும் இணையவழிக் கற்றலில் தேர்ந்த நிபுணர்களின் பங்களிப்பைப் பெறவேண்டியிருக்கிறது.

 


Advertisement

Advertisement
[X] Close