Published : 23,Jun 2017 02:45 AM
பாலியல் புகார் கொடுக்க சென்ற பெண்ணுக்கு போலீஸ் பாலியல் தொல்லை

உத்தரப் பிரதேசத்தில் 37 வயது பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 2 பேர் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம், எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டுமானால் படுக்கைக்கு வர வேண்டும் என்று காவல்துறை அதிகாரி அழைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த 37 வயது பெண் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு சென்று வருகிற வழியில் ஆளில்லாத இடத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு 2 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி புகாரை அந்தப் பெண் ராம்பூர் கஞ்ச் காவல்நிலைத்தில் தெரிவித்தார். ஆனால் அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஜெய்பிரகாஷ் சிங், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதால் உடனடியாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய பலமுறை வலியுறுத்தியுள்ளார். அந்த காவல்துறை அதிகாரி, தன்னோடு பாலியல் உறவு மேற்கொண்டால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக என்று கூறியுள்ளார். மேலும், தனியறைக்கு வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியின் வற்புறுத்தலைத் தாங்க முடியாத அந்தப் பெண், இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.