
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று மாலை நடக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பையை அடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ளது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடாத ரஹானே, முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஷிகர் தவானுடன் ரஹானே அல்லது ரிஷாப் பான்ட் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பிருக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பையில் அஸ்வின், ஜடேஜாவின் வீச்சு சுத்தமாக எடுபடாததால் ‘சைனா மேன்’ பவுலர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி பலமில்லாத அணிதான் என்றாலும் அந்த கேப்டன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், ஜோனதன் கார்டர், கீரன் பவெல் ஆகியோர் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள். மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளம் மெதுவாகவே இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.