கொரோனா சூழலிலும் உலகளவில் டாப் 10 பணக்காரர்களின் வரிசையில் முன்னேறி வருகிறார் முகேஷ் அம்பானி. இந்தச் சூழலில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார்? அவர்களது நிறுவனம் மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
#1 முகேஷ் அம்பானி (63 வயது)
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறார் முகேஷ் அம்பானி. உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது ஏழாவது இடத்தில் நீடித்து வருகிறார். 1981 ஆம் ஆண்டில் அவரது தந்தை திருபாய் அம்பானிக்கு நிர்வாகத்தில் உதவுவதற்காக ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்தார். தந்தையின் மறைவுக்கு பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். டெலிகாம், சமையல் எரிவாயு, பெட்ரோலியம் என வெவ்வேறு விதமான தொழில்களின் மூலம் தனக்கான வருவாயை ஈட்டி வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ‘திங்க் அவுட் ஆப் தி பாக்ஸ்’ என்பதே அம்பானியின் சக்ஸஸ் மந்திரம்.
#2 ஷிவ் நாடார் (75 வயது)
ஹிந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடட் (எச்.சி.எல்) நிறுவனத்தின் தலைவரும், நிறுவனருமான ஷிவ் நாடார் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தூத்துக்குடியில் மூலைபொழி கிராமத்தில் பிறந்தவர். உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. மென்பொருள் சேவையின் மூலமாக வருவாய் ஈட்டி வருகிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 15.30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவதில் இவருக்கு பிரியம் அதிகம்.
#3 ராதாகிஷன் தமாணி (65 வயது)
அமேசான், வால்மார்ட் என இந்திய ரீடைல் சந்தையை பிடிக்க மேல்நாட்டு நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் அதில் கோலோச்சி வருபவர் தான் ராதாகிஷன் தமாணி. அவரது ‘டி மார்ட்’ நிறுவனத்தின் சங்கிலித் தொடர் விற்பனையகங்களில் அத்தியாவசிய பொருள்கள் உட்பட அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றன. ஊரடங்கு மற்றும் கொரோனா சூழலிலும் ராதாகிஷன் தமாணியின் சொத்து மதிப்பு ஏறுமுகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பையின் சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் தொடங்கிய அவரது வாழ்க்கை இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 15.30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். எதையுமே சிம்பிளாக செய்வது ராதாகிஷன் தமாணியின் பாணி.
#4 கவுதம் அதானி (58 வயது)
அதானி குழும தலைவர் கவுதம் அதானி 13.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர். பிரதமர் மோடியின் பிறந்த மண்ணான குஜராத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் வைர வியாபாரியாக தனது தொழிலை தொடங்கிய அவர் பிவிசி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, கட்டுமானம் என பல துறைகளில் தடம் பதித்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி கொண்ட சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, மின் விநியோகம் மாதிரியான தொழிலின் ஊடாக தனது வருவாயை அதிகரித்து இன்று இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.
#5 சைரஸ் பூனவல்லா (79 வயது)
கொரோனா நெருக்கடியிலும் சைரஸ் பூனவல்லாவின் சொத்து மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. அதற்கு காரணம் அவரது பூனவல்லா குழுமம் உற்பத்தி செய்யும் தடுப்பூசி மருந்துகள் தான். சுமார் நூறுக்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பூனவல்லா குழுமம் உற்பத்தி தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவரது சொத்து மதிப்பு சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகளவில் கொரோனா காலத்திலும் அதிகம் சம்பாதித்து வரும் பணக்காரர்களில் சைரஸ் பூனவல்லாவும் ஒருவர்.
#6 உதய் கோட்டாக் (61 வயது)
இந்தியாவின் தவிர்க்க முடியாத தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர் உதய் கோட்டாக். 1980களில் ‘கோட்டாக் கேப்பிட்டல் மேனேஜ்மண்ட்’ நிறுவனத்தை ஆரம்பித்து வங்கிகளை விடவும் குறைவான வட்டி விகிதத்தில் மக்களுக்கு கடனுதவி வழங்கினார் உதய் கோட்டாக். தொடர்ச்சியாக நிதித்துறை சார்ந்த இன்சூரன்ஸ், வாகன கடன் என வெவ்வேறு விதமான பணிகளில் இயங்கி வந்த அவர் 2003 ஆம் ஆண்டில் கோட்டாக் மஹிந்திரா வங்கியை நிறுவினார். பொருளாதார ரீதியாக பல்வேறு இடையூறுகளை இந்தியா சந்தித்து வருகின்ற சூழலிலும் தனது நிர்வாகத் திறமையால் சுமார் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளை வைத்துள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அவருக்கு ஆறாவது இடம்.
#7 சுனில் மிட்டல் (63 வயது)
பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்தவர் சுனில் மிட்டால். தொழிலதிபராக வேண்டுமென சிறு வயதிலிருந்தே பெருங்கனவு கொண்டவர். இருபது வயதில் சைக்கிள் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிலை ஆரம்பித்தார். தொடர்ச்சியாக பல அயல் நாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து வர்த்தக பணியை மேற்கொண்டார். பாரதி குழுமத்தை நிறுவினார். 90களின் துவக்கத்தில் டெலிகாம் துறையில் கால்பதித்த சுனில் மிட்டலுக்கு அதற்கடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு அடியுமே வெற்றி தான். 2003ஆம் ஆண்டில் அவரது பாரதி குழுமம் ஆரம்பித்த ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் துறையில் இன்று வரை முன்னணி நிறுவனமாக நிலைத்து நிற்கிறது. கல்வி, வேளாண்மை, ரியல் எஸ்டேட் என பல்வேறு விதமான தொழில்களை சுனில் மிட்டல் நிர்வகித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 11.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
#8 லக்ஷ்மி மிட்டல் (70 வயது)
இரும்பு உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தில் இருப்பது லக்ஷ்மி மிட்டலின் ‘ஆர்ஸ்லர் மிட்டல்’ நிறுவனம் தான். ராஜஸ்தானில் பிறந்த அவர் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். பட்டப்படிப்பை முடித்ததும் அவரது தந்தை சிறிய அளவில் நடத்தி வந்த இரும்பு ஆலையை கவனித்து வந்தார். இருந்தாலும் இரும்பு உற்பத்திக்கு இந்திய அரசாங்கம் பல்வேறு தடைகளை போட்டதால் இந்தோனேஷியாவில் புதிதாக ஆலையை நிறுவினார். தொடர்ந்து தனது இரும்பு உற்பத்தி தொழிலை உலகம் முழுவதும் விரிவு செய்து முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு சுமார் 9.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ‘முயன்றால் முடியும்’ என்பது லக்ஷ்மி மிட்டலின் சக்ஸஸ் மந்திரம்.
#9 குமார் பிர்லா (53 வயது)
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘ஆதித்யா பிர்லா’ குழுமத்தின் தலைவர் குமார் பிர்லா. 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை கொண்டவர். உரம் தயாரித்தல், கெமிக்கல் உற்பத்தி, தனியார் நிதி நிறுவனம் என பல துறைகளில் பிர்லா குழுமம் ஈடுபட்டு வந்தாலும் அதன் வளர்ச்சிக்கு மிகமுக்கிய காரணம் டெலிகாம் மற்றும் சிமெண்ட் உற்பத்தி தான். இக்குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட் இந்திய சிமெண்ட் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. அதே போல ‘வோடபோன் - ஐடியா’ டெலிகாம் நிறுவனமும் குமார் பிர்லாவின் சொத்து மதிப்பை அதிகரிக்க செய்கின்ற பலமான காரணிகளாக அமைந்துள்ளன.
#10 திலிப் சங்க்வி (65 வயது)
‘சன் பார்மா’ மருந்து கம்பனியின் தலைவரான திலிப் சங்க்வி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். 1983 ஆம் ஆண்டில் சில ஆயிரம் ரூபாய்களை மட்டுமே முதலீடாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சன் பார்மா நிறுவனம் இந்திய அளவில் மருந்து தயாரிப்பு பணியில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இவரது சொத்து மதிப்பு 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
Loading More post
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!