Published : 11,Jul 2020 03:38 PM

தீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.!

Kerala-gold-smuggling-case-takes-new-twist

கேரள தங்க கடத்தல் வழக்கில் சிபிஐ., விசாரணை வேண்டும் என்ற போதும் எந்த விசாரணைக்கும் தயார் என கேரள முதல்வர் சவால் விட்டபோதும் கூட, எதற்கெடுத்தாலும் எல்லா வழக்கிற்கும் எதிர்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருவதும் அதை அரசு ஆமோதிப்பதும் ”அரசியலில் இதல்லொம் சாதாரணமப்பா” என்றிருந்தவர்களுக்கெல்லாம் தற்போது அதிர்ச்சிதான்.

கேரள முதல்வர் எந்த ஏஜென்சியை கொண்டும் விசாரணை நடத்துங்கள், இந்த தங்கக் கடத்தல் மட்டுமின்றி கேரளாவில் நடந்து வரும் அத்தனை கடத்தல் கும்பல்களையும் எல்லாம் கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள்; உங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதும் கூட, எதிர்கட்சிகளின் அழுத்தத்தில் இருந்து அரசின் தைரிய வெளிப்பாட்டை காட்டுவதற்காகத்தான் என முதலில் பார்க்கப்பட்டது.

image

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவிற்கு அனுமதி வழங்கியதும், அதற்கேற்ப தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கை ஏற்றுக்கொண்டதும் கூட பெரிய விஷயமாய் அப்போது பார்க்கப்படவில்லை. மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை எல்லாம் காலதாமதம் மற்றும் தட்டிக்கழிப்பதன் மறுபக்கம் தான் எனக் கூட விமர்சிக்கப்பட்டது. ஆனால், தேசியப் புலனாய்வு அமைப்பு தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தபோது தான் வழக்கின் தன்மை அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு காரணம் தேசிய புலனாய்வு அமைப்பு, “உபா” எனப்படும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் 1965ன் படி, பிரிவு எண் 16 (தீவிரவாத செயல்), பிரிவு எண் 17 (தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி), பிரிவு எண் 18 (தீவிரவாதிகளுக்கான சதித்திட்டம் தீட்டுதல்) ஆகிய பிரிவிகளின் கீழ் தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போதுதான் வழக்கின் தன்மை நாட்டையே அதிரவைக்க துவங்கியிருக்கிறது. திருவனந்தபுரம் விமான நிலைய 30 கிலோ தங்கத்தின் பின்னணியில் தீவிரவாதமா என்று நாட்டு மக்கள் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

image

தேசியப் புலனாய்வு பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் மேற்கண்ட மூன்று பயங்கரவாத பிரிவுகளின் கீழ் முதல் பிரதியாக சரித்குமார் உள்ளார். இவர் தான் ஐக்கிய அரபு அமீரக திருவனந்தபுர தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர். கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஐக்கிய அமீர தூதரகத்தில் இருந்து திருவனந்தபுரம் தூதரகத்திற்கு வந்த “டிப்ளமேட்டிக் பார்சல்”லை வாங்க, விமான நிலைய குடோனின் பின்புறமாக வந்தவர். சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டவர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இவர் தந்த தகவல்தான் கேரள தங்க கடத்தல் வேட்டையை இத்தனை பெரிய அளவிற்கு கொண்டு செல்ல முடிந்தது. தேசிய புலனாய்வு பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் இரண்டாவது பிரதியாக சேர்க்கப்பட்டுள்ளவர் தான் ஸ்வப்னா சுரேஷ். தற்போது வரை கேரள போலீஸார் மற்றும் சுங்கத்துறையினரால் தேடப்பட்டு வருபவர். தான் அப்பாவி என்றும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக உருக்கமான ஆடியோ வெளிட்டு தலைமறைவாக இருப்பவர்.

image

அதாவது, ஐக்கிய அமீர தூதரக தலைவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருவனந்தபுரம் விமான நிலைய உதவி ஆணையர் ராமமூர்த்தியிடம் பேசி, “அமீரகத்தில் இருந்து வந்த டிப்ளமேட்டிக் பார்சலை க்ளீயர் செய்து கொடுங்கள் சார்” என பேசி, தனது நெருங்கிய உறவும், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியான சரித்குமாரை, “டிப்ளமாட்டிக் பார்சல்”லை வாங்க அனுப்பியவர். தேசியப் புலனாய்வு துறை முதல் தகவல் அறிக்கையில் மூன்றாவது பிரதியாக சேர்க்கப்பட்டுள்ளவர் ஃபாசில் ஃபரீத். இவர் தான் இந்த தங்க கடத்தலின் மூளை. அதாவது ஐக்கிய அமீரகத்தில் தங்கம் விற்பனை செய்யும் பெரிய பிஸினஸ் மேன். இவர் தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 30 கிலோ தங்கம் அனுப்பியவர். இதற்காக அமீரக தூதரக முகவரிகளை தேர்வு செய்து, சுங்கத்துறையே பிரித்து பார்க்க அதிகாரம் இல்லாத “டிப்ளமேட்டிக் பார்சல்” முறையை தேர்ந்தெடுத்தவர். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இவரை இந்தியா அழைத்து வந்து விசாரிக்க மத்திய அரசு சார்பில் அமீரகத்திடம் அனுமதி கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

முதல் தகவல் அறிக்கையில் நான்காவது பிரதியாக சேர்க்கப்பட்டுள்ளவர் சந்தீப் குமார். கேரளாவின் கொச்சியில் சாதாரண மரக்கடையில் தினக்கூலி அடிப்படையில் பணியில் இருந்த இவர் தற்போது மிகப்பெரிய தொழிலதிபர். கார்களின் கார்பரேட்டர் சரி செய்வதற்கென்றே தனி பணிமனையை நிறுவியுள்ளார். அந்தப் பணி திறப்பு விழாதான் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்டப்பேரவை சபாநாகரான ஸ்ரீராமகிருஷ்ணன் மூலம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது தலைமறைவாக இருக்கும் சந்தீப் குமாரின் மனைவி ஸ்வப்னா கொடுத்த வாக்குமூலங்கள் தான், தங்க கடத்தலில் அடுத்தடுத்த திருப்பங்களுக்கு செல்வதற்கு பேருதவியாக இருந்துள்ளது. தற்போதும் சுங்கத்துறையின் விசாரணை வட்டத்திற்குள்ளேயே ஸ்வப்னா இருப்பதால் அடுத்தடுத்த காய்கள் படிப்படியாக நகர்த்தப்பட்டு வருகின்றன.

image

தேசிய புலனாய்வு பிரிவின் முதல் தகவல் அறிக்கையின்படி, இந்த நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது ஒருபுறம் இருக்க வழக்கின் பிரிவுகள் மூன்றும் தீவிரவாத பின்னணியை தாங்கியே உள்ளன. வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நால்வரில் ஃபாசில் பரீத் மட்டும் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார். மற்ற மூவரில் சரித் கைதாகி உள்ளார். ஸ்வப்னாவும், சந்தீப்பும் தலைமறைவாக உள்ளனர். இந்த மூவருமே அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொண்டது தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதுவும், சந்தீப் தொழில் விஷயமாக அடிக்கடி வெளி நாடு சென்று வருவதை அவரது மனைவி சவும்யா வாக்குமூலத்திலேயே தெரிவித்துள்ளார். மேலும் கொச்சி விமான நிலையத்தில் இருந்து மட்டும் கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் இறுதி வரையிலான இரண்டரை மாதங்களில் ஸ்வப்னா வெளிநாடு சென்று வந்துள்ள ஆதாரங்கள் தேசிய புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. “டிப்ளமேட்டிக் பார்சல்” அல்லாமல் செல்வாக்கை பயன்படுத்தி நேரடியாகவும் தங்கம் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

image

ஏற்கெனவே, திருவனந்தபுரம் விமான நிலையம் மூலம் மட்டும் 15க்கும் அதிகமான “டிப்ளமேட்டிக் பார்சல்கள்” மூலம் 100 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்டுள்ளது சுங்கத்துறையினர் மூலம் தெரியவந்துள்ள நிலையில், தற்போது கொச்சி விமான நிலையம் மூலமும் அதே “டிப்ளமேட்டிக் பார்சல்” மூலம் 100 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் தங்கம் வந்திருப்பது தேசிய புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளனர். மேலும் கேரளாவின் கோழிக்கோடு, கண்ணூர் விமான நிலையங்களுக்கு இது போன்ற “”டிப்ளமாட்டிக் பார்சல்” வந்துள்ளதா என்பது குறித்தும் எந்த முகவரிக்கு வந்தது, யாரிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் இந்தனை அதிகளவிலான கடத்தல் தங்கம் சென்றடைவது எங்கு, செலவளிக்கப்படுவது எதற்காக, எப்படி, பின்னணியில் யார், தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது போல் தங்க கடத்தலின் பின்னணியில் வெளிநாட்டு தீவிரவாத கும்பலா, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பின் சார்பில் இந்திய கிளை அமைப்புகளா, அவர்களின் செயல்பாடுகள் என்ன, திட்டம் என்ன, நோக்கம் என்ன என்ற அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கெல்லாம் படிப்படியாய் விடை கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் திசை மாறிய விசாரணையை துவக்கியுள்ளது தேசிய புலனாய்வு பிரிவு.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்