[X] Close

இளைய தளபதி விஜய் தளபதியானது மெர்சலுக்கா..? அரசியலுக்கா..?

Ilayathalapathy-Vijay-changes-to-Thalapathy-for-politics-or-Mersal-movie

இளைய தளபதியில் இருந்து தளபதியாக ப்ரொமோசன் ஆக்கிக் கொண்டிருப்பது நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கான குறியீடாகக் கருதி உற்சாகம் அடைந்துள்ளனர் அவரது ரசிகர்கள் 


Advertisement

நடிகர் விஜயின் 43வது பிறந்தநாளையொட்டி வெளியான "மெர்சல்" திரைப்படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில், அவரது பெயருக்கு முன் "தளபதி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை "இளையதளபதி" என்ற அடைமொழியைப் பயன்படுத்திவந்த அவர், தற்போது தளபதியாக மாறியிருப்பது அவரது அரசியல் பிரவேசத்துக்கான குறியீடு எனக் கூறி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி எனும் ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டாக மாறி முதலிடத்தைப் பிடித்தது.  அதைத்தொடர்ந்து, விஜயின் பிறந்தநாளையொட்டி ஹேப்பி பர்த்டே விஜய் என்ற ஹேஷ்டேக் அதை முந்தியது. தொடர்ந்து இரு நாட்களாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கிறது. 
இதேபோல, பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று அவருக்கு கடந்த முறை சிக்கலை ஏற்படுத்திருந்தது. தலைவா படத்தின் டைம் டூ லீட் என்ற குறிப்பு, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதாக, அவரது ரசிகர்களால் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளாலும் பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே சரியானது. 
பல ஆண்டுகளாக ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வந்த விஜய், கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு குரல் கொடுத்திருந்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த விஜய், நோக்கம் சரி.  ஆனால் அதை அமல்படுத்திய முறையால் மக்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். சில தினங்களுக்கு முன் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். 
தற்போது அவரது பிறந்தநாளையொட்டி, திருச்சியில் ரசிகர் மன்றத்தினர் வைத்திருக்கும் பேனர்களில், "தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வா ’’எனும் வாசகமும் இடம்பிடித்திருக்கிறது. 
ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்தபோது அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து வந்த நிலையில், நடிகர் விஜயின் பெயரும் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறது. இளையதளபதியாக இருந்துவந்த அவர் தளபதியாக மாறியுள்ள சூழலில் அவர் அரசியலுக்கு வருவாரா? அல்லது மெர்சல் திரைப்படத்துக்கான விளம்பரப்பணியா?  என்பது விரைவில் தெரியவரும். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close