அவசர உதவிக்கு மறுத்த மருத்துவமனைகள் - ஆட்டோவில் நடந்த சுகப் பிரசவம்

அவசர உதவிக்கு மறுத்த மருத்துவமனைகள் - ஆட்டோவில் நடந்த சுகப் பிரசவம்
அவசர உதவிக்கு மறுத்த மருத்துவமனைகள் - ஆட்டோவில் நடந்த சுகப் பிரசவம்

கோவை துடியலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்காததாலும் நள்ளிரவில் ஆட்டோவிலேயே வட மாநில பெண் ஒருவருக்கு சுகபிரசவம் நடந்துள்ளது.

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் பீகாரைச் சேர்ந்த கெளதம் மற்றும் ஜோதிகுமாரி தம்பதி. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்துவரும் கெளதமின் மனைவி ஜோதிகுமாரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் துடியலூரில் உள்ள 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் கரு தரித்தது முதல் பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஜோதி குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் இருந்த ஆட்டோ மூலம் துடியலூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் செவிலியர் தவிர மருத்துவர் யாரும் இல்லாததால், இங்கு பிரசவம் பார்க்க முடியாது எனக்கூறி கோவை அரசு மருத்துவமனை அல்லது தாளியூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்குள் ஜோதிகுமாரி பிரசவ வலியால் துடித்ததால், துடியலூரில் இருந்த 4 தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் சிகிச்சை அளிக்கக்கூடாது என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதால் கொரோனா பரிசோதனை எடுத்து அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என மறுத்துவிட்டனர். 

இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்து அவரது கணவர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துவிட்டு ஆம்புலன்ஸ்க்காக தொப்பம்பட்டி பகுதியில் ஆட்டோவில் காத்திருந்துள்ளனர். அப்போது, பிரசவ வலியால் துடித்த ஜோதிகுமாரிக்கு பனிக்குடம் உடைந்து ஆட்டோவிலேயே பிரசவம் ஆனது. அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடி அறுபடாமல் இரத்தத்துடன் இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாத அவரது கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொரோனா பரிசோதனை செய்யாமல் சிகிச்சை அளிக்கக்கூடாது என்ற சூழ்நிலையிலும் மருத்துவர் சண்முகவடிவு, தாய், சேய் நிலை கண்டு கொரோனா பாதுகாப்பு உடையுடன் குழந்தையின் தொப்புள் கொடி மற்றும் நஞ்சை அகற்றி தாய், சேய் இருவரையும் காப்பாற்றினார். 

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதி இல்லாததால் இவர்களுக்கு தாளியூர் அரசு மருத்துவமனை மூலமாக இலவசமாக பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. துடியலூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என போர்டு போடப்பட்டுள்ள நிலையிலும், இரவு நேரங்களில் மருத்துவர்கள் அங்கு பணியில் இல்லாததால் அவரச சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகள் பிரசவம் பார்க்க முடியாமல் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ அல்லது தாளியூர் அரசு மருத்துவமனைக்கோ செல்லவேண்டிய நிலை உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏழைகளால் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க முடியாத காரணத்தால் தான் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். எனவே துடியலூர் உள்ளிட்ட நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதையும், சேவைகள் தடைப்படாமல் இருப்பதையும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறுகையில், தனது கவனத்திற்கு இந்த சம்பவம் வந்துள்ளதாகவும், விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் நோயாளிகள், பொதுமக்களிடம் கூடுதல் முறையில் பொறுப்புடன் நடந்துக்கொள்ளும் படி அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com