Published : 29,Jun 2020 07:41 PM
எஃப்.ஐ.ஆரில் முரண்பட்ட தகவலா? வெளியான சாத்தான்குளம் சிசிடிவி வீடியோ..

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரத்தில் போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரில் முரண்பட்ட தகவல் பதிவு செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாவே முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
இதனிடையே போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் நகல் வெளியானது. அதில், சாத்தான் குளம் தலைமைக்காவலர் முருகனும், காவலர் முத்துராஜும் கொரோனா ஊரடங்கு ரோந்து பணிக்கு சென்றதாகவும் அப்போது ஜெயராஜூம் அவரது மகன் பென்னீசும் அரசு அனுமதியை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறியபோது தகாத வார்த்தையால் திட்டி தரையில் விழுந்து புரண்டார்கள். இதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கொலைமிரட்டலும் விடுத்தனர் என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மேல் இந்திய தண்டனைச் சட்டம் 188, 269, 294(பி), 353,506(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பென்னீஸ் கடைக்கு அருகில் உள்ள சிசிடிவியின் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் இருக்கும் காட்சிகளுக்கும் எஃப்.ஐ.ஆரில் பதிவிட்டுள்ள தகவல்களுக்கும் முரண்பாடுகள் உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஜெயராஜூம், பென்னீசும் தரையில் விழுந்து புரண்டதாக போலீசார் தெரிவித்திருப்பது பொய் தகவலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வீடியோவில் போலீசார் அழைத்தவுடன் ஜெயராஜ் உடனே சென்று விடுகிறார். அதையடுத்து பென்னீசும் நண்பருடன் பைக்கில் ஏறி காவல்நிலையம் செல்கிறார்.
இதுகுறித்து பென்னீஸ் கடையின் அக்கம்பக்கத்தினர் கூறுகையில், “போலீசார் வந்து அழைத்ததும் ஜெயராஜ் சென்று விட்டார். அங்கு அவரை சுமோவில் ஏற்றினர். அப்போது பென்னீசும் அவரது வழக்கறிஞர் நண்பரும் போய் கேட்டனர். எதுவாக இருந்தாலும் காவல்நிலையம் வந்து பேசிக்கொள்ளுமாறு போலீசார் கூறினர். இதையடுத்து நாங்கள் சிலர் காவல்நிலையம் சென்று அவர்களை பார்க்க முற்பட்டோம். ஆனால் தலைமை காவலர் முருகன் யாரும் வரக்கூடாது என்று கூறி காவல்நிலைய கதவை அடைத்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளனர்.