Published : 29,Jun 2020 06:28 PM
பால் விற்பனையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த விவகாரம்: காவலர் சஸ்பெண்ட்

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்புபடுத்தி பால் விற்பனையாளர்களை ஃபேஸ்புக்கில் மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பால் விற்பனையாளர்கள் காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் எடுக்க அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து சாத்தான்குளம் சம்பத்தை சுட்டி காட்டி நாகை டிஎஸ்பி வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரியும் ஆயுதப்படை காவலர் ரமணன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும் வாகனத்தை மறிப்போம். மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளை பதிவு செய்வோம் என்று மிரட்டும் தொனியில் பதிவு செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதைத்தொடர்ந்து காவலர் ரமணன் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நாகை எஸ்பி செல்வ நாகரத்தினம் விளக்கம் கேட்டு நேற்று ரமணனுக்கு நோட்டீஸ் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு அழைத்த நாகை எஸ்பி செல்வ நாகரத்தினம் ஆயுதப்படை காவலர் ரமணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் மர்ம மரணம் தொடர்பாக மக்கள் காவல்துறை மேல் அதிருப்தியில் இருக்கும் சூழலில் இதுபோன்ற சில காவலர்களின் சர்ச்சைக்குரிய பதிவுகள் உயரதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.