Published : 24,Jun 2020 09:58 AM
குரங்கை பிடித்து டிக்டாக் செய்த இளைஞர்கள் : தேடிவந்து பிடித்த வனத்துறை

ஓமலூர் அருகே வனப்பகுதியில் உள்ள குரங்கை பிடித்து டிக்டாக் செய்து வெளியிட்ட இரண்டு இளைஞர்களை வனத்துறையினர் பிடித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி வனத்துறை அருகேயுள்ள காளிகவுண்டன்கொட்டாய் பகுதி கிராமத்தில், சிலர் குரங்குகளை பிடித்து வதை செய்வதாக புகார்கள் வந்தன. ஆனால் வனத்துறை அதிகாரிகள் அதை கட்டுபடுத்த முடியாமல் இருந்தனர். இந்நிலையில், அப்பகுதி வாலிபர்கள் சிலர் குரங்குகளை பிடித்து டிக்டாக் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டேனிஸ்பேட்டை வனச்சரகர் பரசுராமமூர்த்தி மற்றும் வனத்துறை அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் சமூக வலைதளங்களில் வந்த போட்டோ மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்தனர். இதில் ராஜா என்பவரின் மகன் கவிபாலா மற்றும் தங்கராஜ் மகன் பிரகாஷ் ஆகிய இருவரும் குரங்கை பிடித்து டிக்டாக் செய்ய வைத்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் உள்ள குரங்குகளை அவ்வப்போது பிடித்து டிக்டாக் செய்து வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த டேனிஷ்பேட்டை வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், இருவருக்கும் தலா ரூ.5,000 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.