Published : 24,Jun 2020 08:32 AM

லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி தேவை - உயர்நீதிமன்ற கிளை கருத்து

Madurai-High-court-advisory-to-Tamilnadu-Government-police-department-about-father-son-died-case

லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி தேவை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20-ந்தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜை போலீசார் திட்டியதாக தெரிகிறது. இதனால் போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ்(31) போலீசாரிடம் சமாதானம் பேச முயன்றுள்ளார். இதனால் பென்னிக்ஸுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

image

இதையடுத்து விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.இதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் 21-ந்தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, திடீரென பென்னிக்ஸ் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பென்னிக்ஸ் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். மேலும் பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜும் அதிகமான காய்ச்சல் காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த இரு மரணங்களுக்கும் நீதி கேட்டு தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 உதவி ஆய்வாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

image

இதனிடையே இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் இன்று மதியம் 12.30 மணிக்கு காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. 

image

இந்நிலையில் லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி தேவை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் "முற்றுப்புள்ளி வைக்க உரிய வழிகாட்டுதலை அரசு காவல் துறையினருக்கு பிறப்பிக்க வேண்டும். இந்த உயிரிழப்பு விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் என்பதை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்