சர்ச்சையான வரைபடம்.. வலுக்கும் எதிர்ப்பு பிரச்சாரம் : இந்தியாவின் கோபத்தை சீண்டும் நேபாளம்

சர்ச்சையான வரைபடம்.. வலுக்கும் எதிர்ப்பு பிரச்சாரம் : இந்தியாவின் கோபத்தை சீண்டும் நேபாளம்
சர்ச்சையான வரைபடம்.. வலுக்கும் எதிர்ப்பு பிரச்சாரம் : இந்தியாவின் கோபத்தை சீண்டும் நேபாளம்

நமக்கு எப்போதும் பிரச்னை தரும் நாடுகள் இரண்டுதான் ஒன்று சீனா மற்றொன்று பாகிஸ்தான். சீனாவின் கொடைச்சல்கள் எல்லையில் எப்போதாவது இருக்கும், ஆனால் பாகிஸ்தானுடன் பிரச்னைகள் ஏராளம். எப்போதும் நாம் அவர்களிடையே மல்லுக்கட்டிக்கொண்டே இருப்போம். இப்போது சீனாவுடன் கல்வான் எல்லையில் நிகழ்ந்த பிரச்னைகள் உயிரிழப்புகள் வரை சென்றுவிட்டதால், போர் பதற்றம் வரை சென்றது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்று வருகின்றன. இது ஒரு பக்கம் நீண்டுக்கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில் நேபாளம் புரட்சிகர அவதாரம் எடுத்து இந்தியாவை சீண்டி வருகிறது. இது இந்தியாவே எதிர்பார்க்காத இம்சை என்றுக் கூட எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.

இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு நேபாளம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த கட்டமாக வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது அந்த வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவுக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது என்றே கூறலாம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேபாளத்தில் ஊடகங்கள் வழியாக இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரமும் நிகழ்ந்து வருகிறது.

இதன் தொடக்க புள்ளியாக உத்தரகாண்ட் மாநிலத்தின் நேபாள எல்லையில் இந்தியா அமைக்கவுள்ள 80 கி.மீ தொலைவிலான சாலைதான் அமைந்ததாக கூறப்படுகிறது. காடியபார்க் பகுதியில் தொடங்கி லிபுலேக் பாஸ் என்ற பகுதிவரை செல்லும் இந்த சாலைக்கு கடந்த மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார். இதில், லிபுலேக் பாஸ் என்ற பகுதி இந்தியா - நேபாளம் இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுகிறது. அந்தப் பகுதிக்கு இருநாடுகளும் உரிமை கோரி வருகின்றன. 2005ம் ஆண்டு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த சாலை திட்டம் தற்போது 439 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட வுள்ளது. கைலாஷ் - மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் தூரம் இந்த சாலை மூலம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை தொடக்க விழா நடந்து முடிந்த பிறகு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாளத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாகத் தான், புதிய வரைபட சர்ச்சை கிளம்பியது.

இந்தியா - நேபாளம் இடையே கலாச்சாரம், அரசியல், வணிகம் உள்ளிட்டவற்றில் 70 ஆண்டுகளுக்கும் மேலான இறுக்கமான நட்பு இருக்கிறது. அதை மறந்துவிட்டு இவ்வாறு ஒரு வரைபடத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதன் மூலம், இந்தியாவுடன் இனியும் நட்பை பராமரிக்கத் தேவையில்லை என்ற முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம் ? பின்னணியில் இருப்பவர் யார் என்றால், சந்தேகமில்லாமல் பலரும் கை காட்டுவது சீனாவைதான். ஆம், நேபாளத்தில் உள்நாட்டு அரசியலும் ஏறக்குறைய சந்தேகத்தை நியாயப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன.

நேபாளம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. அந்நாட்டு பிரதமர் காம்ரேட் கே.பி.ஷர்மா ஓலி, அங்கிருக்கும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக சீனாவின் தலையீடு என்பது நேபாளத்தில் அதிகரித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு நேபாளம் மீது பொருளாதார தடை விதித்த பிறகு, சீனா, நேபாளத்திற்கு நிறைய பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. புதிய சாலை அமைக்கும் திட்டங்களுக்கு உதவி வருகிறது. சீனாவை, நேபாளத்திலிருந்து இணைக்கக்கூடிய சாலைகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் பிற பொருட்கள் சீனாவில் இருந்து நேபாளத்துக்கு எளிதாக சென்று சேர்வதற்கு இது வழிவகுக்கின்றது.

இந்தியாவின் பலத்துக்கு முன்பு நேபாளம் சிறிய பலம் கொண்ட நாடு என கருதினாலும், இப்போதைக்கு இந்தியா நேபாளத்தை அவ்வளவு எளிதாக கடந்துச் செல்லக் கூடாது என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பிரச்னை செய்கிறவனை சமாளித்துவிடலாம், ஆனால் பின்னால் இருந்து பிரச்னை செய்பவனையும் நாம் கவனிக்க வேண்டும் என்பதே இப்போதைய தேவை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com