Published : 19,Jun 2020 06:35 AM
அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பே குடும்பங்களுக்குள் எளிதில் பரவும் கொரோனா: ஆய்வில் தகவல்

குடும்பத்தில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை அவர் உணர்வதற்கு முன்னதாகவே குடும்பத்தினருக்கு பரவி விடுவதாக மருத்துவ ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சீனாவின் குவாங்சோ நகரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான 349 நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 1964 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த கட்டுரை தி லேன்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்து இருக்கிறது என்பதை அவர் உணர்வதற்கு முன்பாகவே, தன்னோடு ஒன்றாக வாழ்கிறவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவி விடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பே தொற்று மற்றவர்களுக்கு பரவுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடும்பங்களில் உள்ள 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கே கொரோனா வைரஸ் எளிதில் பரவுவதாகவும், சிறிய அறிகுறி இருந்தாலும் காலம் தாழ்த்தாமல் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை சரியான நேரத்தில் தனிமைப்படுத்திவிட்டால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.