[X] Close

சோதனை மேல் சோதனை.....

Continuous-problems-foe-ADMK-party

 


Advertisement

ஜெயலலிதா சந்திக்காத வழக்குகளா..? ஆனால், அவர் சிலமுறை சிறை சென்றபோதும் கூட அதிமுகவை அசைத்து பார்க்க யோசித்தது கூட இல்லை மத்திய அரசு. ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவின் அஸ்திவாரத்தையே தகர்க்க பல்வேறு அஸ்திரங்கள் ஏவப்பட்டு வருகின்றன. இதனால், ஜெயலலிதா இருந்தவரை இரும்புக்கோட்டையாக இருந்த அதிமுக இடிந்துபோன கோட்டையாகி பல அணிகளாக சிதைந்து கிடக்கிறது. 
ஜெயலலிதா இறந்ததும், அந்தக் கட்சியை அதே கட்டுக் கோப்புடன் யார் கொண்டு சொல்வார்கள் என்ற கேள்விக்கு விடை சசிகலா என்றார்கள். ஓபிஎஸ்ஐ பதவி விலகச் சொல்லி விட்டு கட்சியின் பொதுச்செயலாளர், முதலமைச்சர் பொறுப்பை ஏற்க முயன்றார் சசிகலா. ஆனால் எதிர்பாராத திருப்பமாக ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிர்ப்பாக போர்க்கொடி தூக்கியது அந்தக் கட்சியில் முதல் சலசலப்பை ஏற்படுத்தியது.
அடுத்து சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்தது அதிமுகவுக்கு விழுந்த அடுத்த அடி. பெங்களூரு சிறைக்குப் போவதற்கு முன்பு கட்சியையும் ஆட்சியையும் கட்டுக் கோப்பாய்ப் பார்க்க எடப்பாடியை முதலமைச்சராகவும் தினகரனை கட்சியின் துணைப்பொதுச்செயலாளராகவும் ஆக்கி விட்டுச் சென்றார் சசிகலா. கட்சியைச் சில மாதங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் தினகரன். அவரும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவை பின்னின்று இயக்குவார் என பலராலும் கூறப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன்.’நாங்கள் தான் அதிமுக’ என மார்தட்டி வந்தார்.  அவரையும் சைலண்டாக்கியதும் வழக்குதான். சசிகலாவின் கணவர் நடராஜன், பாஸ்கரன் ஆகியோர், லண்டனில் இருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதியாக்கி 1.06 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோதும், அந்த வழக்கு தற்போது தூசி தட்டப்பட்டது நடராஜனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் கட்சி, மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விட்டார். 

சிறைக்குப் போவதற்கு முன் அதிமுக விவகாரத்தில் தலையிட மாட்டேன். கட்சியில் இருந்து ஒதுங்கிவிடுகிறேன் என வாகுறுதி அளித்த டிடிவி.தினகரன் திஹார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த பிறகு என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபடப்போகிறேன் என அறிவித்தார். ஆனால், எடப்பாடி சகாக்களோ சசிகலா குடும்பத்தினர் ஆட்சியிலும், கட்சியிலும் தலையிடக்கூடாது என அடக்கத்தோடு கூறிவந்தனர். 


Advertisement

இந்நிலையில், டிடிவி.தினகரன் தான் அதிமுகவை நிர்வாகிக்கக்கூடிய தகுதி படைத்தவர். அவர் தலைமையின் கீழ் செயல்படுவோம் எனக்கூறி சில எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக ஈட்டி எரிந்தனர். அதோடு முடியவில்லை. அவர் மீதும் அமைச்சர்களான செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதற்கிடையில் மற்றொரு சலசலப்பும் கிளம்பியது. சசிகலா தரப்பினர் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க 6 கோடி பணம் தருவதாக பேரம்பேசியதாக ஓ.பி.எஸ்.அணியில் இருக்கும் மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ., சரவணன் பேசுவதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க முயற்சித்து அது முடியாமல் போகவே, நீதிமன்றத்தை நாடியது திமுக. இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்க தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். 
இதோடு முடியவில்லை. இந்த வீடியோ விவகாரத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடமும் கொண்டு சென்றனர். இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை செயலாளரும் சபாநாயகரும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் ஆளுநர். எதிர்கட்சி சார்பில் சொல்லப்பட்ட புகாரை வைத்து ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது இதுவே முதல்முறை.

சசிகலா தரப்பு மீது வழக்கு மேல் வழக்குகளை போட்டு தன் இஷ்டத்திற்கு வளைக்கப் பார்க்கிறது மத்திய அரசு, அதிமுக அரசையும் நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது  என பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் மாநில அரசோ, டிடிவி.தினகரனோ இதுவரையில் மத்திய அரசை நேரடியாக வலிமையாக எதிர்த்துக் கருத்துச் சொல்லாமல்தான் இருந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close