Published : 16,Jun 2020 12:42 PM

தவறான உணவு முறையாலும் மன அழுத்தம் உண்டாகும்” - எச்சரிக்கும் சித்த மருத்துவர்

Improper-Eating-and-Stress-There-will-be-------Siddha-doctor-madhukarthish

மன அழுத்தம். இன்று சிறியவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் சந்திக்கும் தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. பொருளாதாரத்தில் மேலோங்கிய நிலையில் இருக்கிறவர்களுக்கு என்ன கவலை என்று கூறுபவர்களுக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், ஏழை, பணக்காரன் எவ்வித வேறுபாடு இல்லாத அனைவருக்கும் மன அழுத்தம் உண்டு என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

image

மன அழுத்தத்தை வைத்து இங்கு ஒரு மருத்துவ சந்தை நடமாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது பாரம்பரியத்தில் மன அழுத்தம் என்னவாக இருந்தது. அதனை அவர்கள் உணவு மரபியலை வைத்து எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்த அறிய, சித்த மருத்துவரும் உணவியல் நிபுணருமான மருத்துவர் மது கார்த்தீஷை புதிய தலைமுறை வாயிலாக தொடர்பு கொண்டு பேசினோம். அவர் அளித்த விளக்கங்கள் பின்வருமாறு..

image

மன அழுத்தத்திற்கும் நாம் அருந்தும் உணவிற்கு சம்பந்தம் இருக்கிறதா?

நமது உணவிற்கும் மன அழுத்தத்திற்கும் மிக நுட்பமான சம்மந்தம் இருக்கிறது. ஏனெனில் இந்த உடலில் மனம் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு வயிற்றில் செரித்து, அது ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. இந்த ரசாயன கலவைதான் நமது உடலில் ஏற்படும் உணர்ச்சிகளில் முக்கியப் பங்காற்றுகிறது.

இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால் நமது குடும்பத்தின் பரம்பரை ஜீனில் சில குறிப்பிட்ட உணவுகளின் தடங்கள் அப்படியே பதிந்திருக்கும். அந்த தடங்கள் ஒரு முழு உணவிற்கான விகிதத்தை நன்றாக அறிந்திருக்கும். நமது முன்னோர்கள் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பதில் எப்படி கவனம் செலுத்தினார்களோ, அதே அளவு கவனத்தை அதை எப்படி, எந்த விகிதத்தில் தயார் செய்ய வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினர். ஆனால் அந்த உணவு விகித முறையே இன்று இல்லாமல் போய் விட்டது.

image

எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் நமது வீட்டில் வைக்கும் சட்னியை எடுத்துக்கொள்வோம். நமது முன்னோர்கள் முதலில் வெங்காயம் அடுத்தது சீரகம் என எந்தப் பொருளை எதற்கு அடுத்ததாகக் சேர்க்க வேண்டும் ,எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதில் சில விதி முறைகளை கையாண்டார்கள். அந்த விதிமுறைகளின் படி நாம் ஒரு உணவு பொருளை இன்னொரு உணவு பொருளோடு கலக்கும் போது, பொருட்கள் கலக்கும் விதமானது மாறுபடும். அது நமக்கு வேறோரு வடிவத்தில் நமக்கான ஆரோக்கியத்தை வழங்கும்.

ஆனால் இன்று நாம் மிக்ஸியில் எல்லாவற்றையும் கொட்டி அரைக்கும் சட்னியில் அதற்கு வாய்ப்பில்லை. இந்த உணவு விகித முறைக்கும் நமது மன ஆரோக்கியத்துக்கும் மிகப்பெரிய சம்பந்தம் இருக்கிறது. அதே போல பருவகாலங்களில் கிடைக்கும் உணவுகளை நாம் அந்தந்த பருவங்களில் சாப்பிடாமல் வருவதும் மனச் சிக்கலுக்கு வழி வகுக்கும்.

image

இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னெவென்றால் மக்கள் இந்தியா ஒரு வெப்ப நாடு என்பதையே மறந்து விட்டார்கள். அந்த வெப்பத்தை நமது உடல் கிரகிப்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் நீர்ச் சத்து அதிகமான உணவுகளை பரிந்துரைத்தார்கள். ஆனால் நாமோ இன்று உடலில் வறட்சித் தன்மையை உண்டாக்கும் இட்லி, பிரியாணி உள்ளிட்ட உணவுகளையே பிரதான உணவாக உண்டு வருகிறோம்.

இவை நம் உடலில் சென்று வறட்சித்தன்மையை உண்டாக்கி விடும். நமது உடலில் ஏற்படும் இந்த வறட்சித் தன்மை நமது மனநிலையிலும் வறட்சித்தன்மையை உண்டாக்கி விடும். இந்த மனநிலைதான் அதிகப்படியான கவலை, கோபம், சந்தேக உணர்வு உள்ளிட்டவற்றை கொடுக்கிறது. குறிப்பாக இந்த உணவுப் பழக்கம் நமது உடலை மந்தப்படுத்தி சூழ்நிலையை எதிர்கொள்ளாத மனநிலைக்கு நம்மை அழைத்துச் சென்று விடும்.

அதே போல ஒரு உணவை ஒருவர் எந்த நேரத்தில் உண்கிறார் என்பதும் மன நலத்தில் மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. காலையில் தூங்கி விழித்த இரண்டு மணி நேரத்தில் கெட்டியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மதிய உணவு, அதன் பின்னர் மாலையில் திரவ உணவு என எடுத்துக்கொள்ள வேண்டும்.

image

மாலை திரவ உணவு ஏன் எனில் அந்த சமயம் நமது கிட்னியானது உச்சப்பட்ச திறனில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த முறையில் நாம் சாப்பிடும் போது நமது உடலானது நம் நாட்டின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இயங்கும். ஆனால் அந்த நடைமுறை அப்படியே இன்று தலை கீழாக மாறியிருக்கிறது. அதனால், மலச்சிக்கல் என்பது நமது உடலில் தானாக வந்து விடும். மலச்சிக்கல் வந்து விட்டால் போதும், மனச்சிக்கல்களும் வரிசைக்கட்டி கொண்டு நமது உடலில் குடியேறத் தொடங்கி விடும்.

மன அழுத்ததை இன்றைய இளைஞர்கள் எப்படி கையாள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முதலில் உணவு மரபியல் குறித்த விழிப்புணர்வு, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். அதே போல இன்றைய இளைஞர்கள் உறவுகளுடன் மனதளவில் ஒன்றாமல் இருக்கின்றனர். இதற்கும் காரணம், நமது பாரம்பரிய உணவுகளை அவர்கள் உண்ணாமல் இருப்பது.

image

நமது பரம்பரை உணவுகளை உண்ணும் போது இயல்பாகவே உடலின் உள்ளே இருக்கும் ஜீன் தடயங்கள் உறவுகளுக்கிடையேயான பிணைப்பை உண்டாக்கும். அதனால் இளைஞர்கள் அவர்களது அம்மாவோ அல்லது பெரியர்வர்களிடம் குறைந்தது 4 வீட்டு உணவுகளையும் அதை செய்யும் முறையையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதே போல பெற்றோர்களும் தங்களது குழந்தைளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது நமது பாரம்பரிய உணவுகளை செய்து கொடுக்க வேண்டும்.

image

பருவ நிலை உணவுகள் குறித்த அறிவை பெற்று, அதன் படி அந்தந்த காலங்களில் கிடைக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

இறுக்கமான மனநிலையை விரட்டுவதில் இனிப்புச் சுவைக்கு மிக முக்கியபங்கு உண்டு. அதன் படி இனிப்பு சுவை கொண்ட நமது பாரம்பரிய களிவகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

மிக முக்கியமாக கிளறிய சாதங்களான எலுமிச்சை, தக்காளி, சாம்பார், தக்காளி சாதம் போன்றவற்றை காலை சமைத்து அதை மதியம் வரை வைத்திருந்து பயன்படுத்தும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். ஏனென்றால் ஒரு கிளறிய சாதத்தின் ஆயுட்காலம் என்பது மூன்று மணி நேரம் மட்டுமே. அதனால் கூடுமானவரை இது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது அதை உடனே தயார் செய்து சாப்பிடும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

image

வெந்தய களி, தணியா துவையல், உளுந்தங் களி, ரச வகைகள் உள்ளிட்டவை நமது மன நலனில் மிக முக்கிய பங்கு வகிப்பவை.

image

அதே போல தூக்கம். இதில் நீங்கள் அலட்சியமாக இருக்கும் பட்சத்தில் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது. காரணம் தூக்கத்திற்கும் மன நலனிற்கும் மிக முக்கியமான சம்பந்தம் இருக்கிறது. பகல் நேரத்தில் வேலை செய்வதும், இரவு நேரத்தில் தூங்குவதுதான் இயற்கையான நடைமுறை. ஆனால் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் அது மாறியிருக்கிறது. அப்படி மாறும் போது அவர்களின் மொத்த உறுப்புகளும் சரிவர இயங்குவதில் பிரச்னை ஏற்படும். இதனால் மலச்சிக்கல் உண்டாகி மனச் சிக்கலும் வந்து விடும்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்