
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த 2600 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏழைத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள், பிரபலங்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை ஆங்காங்கே செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 2600 குடும்பங்களுக்கு, நிவாரண பொருட்களை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி, அதிகாரிகள் முன்னிலையில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பாஸ்கர், சோளிங்கர் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், நாதஸ்வரம்/தவில் கலைஞர்கள், கிராமிய நாடக கலைஞர்கள், சலவை தொழிலாளர்கள், லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் தொழிலாளர்கள், மருத்துவ சுகாதார பணியாளர்கள்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக அரசு அறிவித்துள்ளபடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தெர்மோமீட்டர் மூலம் வெப்ப பரிசோதனை செய்து, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, முகக்கவசம் அணிய வைத்து சமூக இடைவெளியை பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.