Published : 20,Jun 2017 06:20 AM
ரூ.6-க்கு இண்டர்நெட்: ஜியோவுடன் போட்டிபோடும் வோடஃபோனின் சலுகைகள்

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள சலுகைகளுக்கு போட்டியாக வோடஃபோன் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.6 செலுத்தி ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் இண்டர்நெட் பயன்படுத்திக் கொள்ளும் சலுகையை அறிவித்துள்ளது.
வோடஃபோன் அறிவித்துள்ள புதிய சலுகைகளின் விலை ரூ.29 முதல் துவங்குகிறது. இதில் ஒவ்வொரு வட்டாரம் மற்றும் சாதனத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் 3ஜி/4ஜி டேட்டா அதிகாலை 1.00 மணி முதல் காலை 6.00 மணி வரை வழங்கப்படுகிறது. இது ஒரு மணி நேரத்திற்கு ரூ.6-க்கும் குறைவாகவே இருக்கிறது என்றாலும் திட்டத்தின் விலை ஒவ்வொரு வட்டாரங்களிலும் மாறும் என வோடஃபோன் அறிவித்துள்ளது. வோடஃபோன் அறிவித்துள்ள புதிய ரூ.29 திட்டத்தை எந்த நேரத்திலும் ஆக்டிவேட் செய்ய முடியும். இந்த திட்டம் அதிகாலை 1.00 மணி முதல் வேலை செய்யும். புதிய சூப்பர்நைட் எனப்படும் இந்த திட்டத்தை *444*4# எனும் குறியீடு மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.
முன்னதாக வோடஃபோன் ரூ.786 எனும் புதிய திட்டத்தை அறிவித்தது. வோடஃபோன் ரம்ஜான் 786 திட்டத்தில் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், அன்லிமிட்டெட் தேசிய ரோமிங் மற்றும் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ராஜஸ்தான் வட்டாரங்களில் உள்ள ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஃபுல் டாக்டைம் மற்றும் நொடிக்கு ரூ.0.14 விலையில் சர்வதேச அழைப்புகள் ஐக்கிய அரபுகள், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படுகிறது.