Published : 11,Jun 2020 06:44 AM
கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக அரசு எதையும் மறைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி

கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக அரசு எதையும் மறைக்கவில்லை என்றும் மறைக்கவும் முடியாது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் சென்னையில் மருத்துவர் உட்பட 11 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தமிழக அரசு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை தவறாக காட்டுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் இன்று சேலத்தில் 441 கோடி செலவில் கட்டப்பட்ட இரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது “ தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. கொரோனா உயிரிழப்புகளைப் பொருத்தவரை அரசு எதையும் மறைக்கவில்லை. மறைக்கவும் முடியாது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் கொரோனா தொடர்பான விவரங்கள் வெளிப்படையாக வெளியிடப்படுகின்றன. நாளை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும் குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்” என்று பேசினார்.