Published : 19,Jun 2017 01:15 PM

தமிழகத்தில் ஆபத்து விளைவிக்கும் பால் ‌இல்லை: சுகாதாரத் துறை

No-dangerous-milk-in-Tamil-Nadu

தமிழகத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பால் எதுவும் இல்லை என சுகாதாரத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாதவரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த புகாரை தெரிவித்திருந்தார். ரசாயன கலப்பட பாலால் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருவதாக அமைச்சர் கூறியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ‌ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரசாயன பால்‌கலப்படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சுகாதாரத்துறை இன்று அறிக்கை தாக்கல் செய்தது. 

இந்த அறிக்கையில், 2011 ஆகஸ்ட் மாதம் முதல், 2017‌ மே மாதம் வரை 886 பால் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 699 பால் மாதிரிகள் பாதுகாப்பானவை என்றும், 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை என தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்‌ட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் எந்த பால் மாதிரிகளும் இல்லை என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, 2011 ஆகஸ்ட் முதல், 2017 மே மாதம் வரையில் பால் பொருட்களும் ஆய்வுக்கு‌ உள்ளாக்கப்பட்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 15 மாவட்டங்களில் 212 மாதிரிகள் சோதிக்கப்பட்டு அவற்றில் 115 மாதிரிகள் பாதுகாப்பானவை என்று தெரியவந்துள்ளது. 9 மாதிரிகள் பாதுகாப்பற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 மாதிரிகள் தரக்குறைவானவை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. பாலின் தரம் குறித்து கண்காணிக்க மாநில அளவில் தலைமைச் செயலாளர் ‌மற்றும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் விற்கப்படும் சில தனியார் நிறுவன பாலில் உயிருக்கு‌ஆபத்தான ரசாயனங்கள் கலக்கப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர் குற்றச்சாட்டை கூறியிருந்தநிலையில், சுகாதாரத் துறை சார்பில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்