[X] Close

”குழந்தைகளுக்கு கேம்ஸ் போட்டுக்காட்டி டயாலிஸிஸ் செய்வேன்” - தம்பிதுரையின் நெகிழ்ச்சிபேட்டி

சிறப்புச் செய்திகள்

-I-will-do-dialysis-games-for-children----thambi-dhurai


தமிழகத்தில் தற்போது எங்குப் பார்த்தாலும் கொரோனா குறித்த விவாதங்களும், எச்சரிக்கைகளும், நம்பிக்கை வார்த்தைகளும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. மருத்துவர்களும் கொரோனாவுக்கான எதிரான போரை வெற்றி கொள்வதில் தங்களது முழு கவனத்தைச் செலுத்தி இரவு பகல் பாராமல் செயலாற்றி வருகின்றனர். ஆனால் நாம் இங்குக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கொரோனாவுக்கு எதிரான போர் என்பது கொரோனாவை மட்டும் வெற்றிகொள்வதில்லை.


Advertisement

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் இந்தக் காலகட்டத்தில் பிறநோய்களால் அவதியுறும் நோயாளிகளுக்கும் எந்தப் பாதிப்பு வராமல் பாதுகாப்பதும் மிக முக்கியமானது. எப்படி கொரோனா தொற்று எதிர்த்து மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார்களோ, அதே போலப் பிற நோயாளிகளைப் பாதுகாப்பதிலும் மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

image


Advertisement

 

அப்படிக் கடந்த 70 நாட்களாக எந்த விடுப்பும் எடுக்காமல் மருத்துவமனையிலேயே தங்கி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்தான் குழந்தைகளுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளித்து வரும் மருத்துவப்பணியாளர் தம்பிதுரை. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் பரபரப்புடன் பணியாற்றி வரும் தம்பிதுரையை புதிய தலைமுறை வாயிலாகத் தொடர்பு கொண்டோம். அதே பரபரப்புடன் எங்களிடமும் பேசினார்.

“எனக்குச் சொந்த ஊர் தர்மபுரி அருகே உள்ள மானியாதஹாள்ளி. அப்பா பேர், அபி மன்னன். அம்மா பேர் பூபதி. விவசாய குடும்பம்தான். தங்கை கலா, அவரும் மருத்துவத்துறை சார்ந்த ( ENT) படிப்பைத்தான் தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறார்” என்றார்.


Advertisement

image

மருத்துவத் துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன், எனது உறவினர் ஒருவர் ஒன்றரை வருடம் படிக்கக் கூடிய பாரா மெடிக்கல் பயிற்சியை அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் ஆர்வம் இல்லாமல் சேர்ந்தேன். ஆனால் பயிற்சிக்குள் நுழைந்த பின்னர் மருத்துவத் துறை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தப் பயிற்சி முடிந்த பின்னர்தான் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராகச் சேர்ந்தேன். கடந்த மூன்று வருடங்களாக இங்கு பணியாற்றி வருகிறேன்.

கொரோனா காலம் உங்களுக்கு எந்த வகையில் சவாலாக அமைந்தது?

எழும்பூர் மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்துவதற்குச் சிறிது நாட்கள் முன்னர் தான் என்னுடன் பணியாற்றி வந்த பிரியா என்பவர் அவரது சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். நாங்கள் இருவரும் தான் குழந்தைகளுக்கான டயாலிஸிஸ் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் போக்குவரத்து முடக்கப்பட்டதால் அவரால் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பமுடிய வில்லை. அதனால் குழந்தைகளுக்கான டயாலிஸிஸ் சிகிச்சை அளிப்பதற்கு நான் மட்டுமே மருத்துவமனையிலிருந்தேன்.

அந்தத் தருணத்தில் என் மனதில் ஒன்று மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. அது, இந்த இக்காட்டான சூழ்நிலையில் குழந்தைகளுக்காக நாம் இருக்கவேண்டும். அதற்காக, அவர்களின் உயிருக்காக மட்டுமே கடந்த 70 நாட்களும் மருத்துவமனையிலே தங்கி பணியாற்றினேன்.

image

நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதை விடக் குழந்தைகளுக்குச் சிகிச்சை என்பது சவாலான காரியமல்லவா?

நிச்சயமாக, அதில் டயாலிஸிஸ் இன்னும் சிரமமானது. வலி காரணமாக ஆரம்பத்தில் குழந்தைகள் டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்க அனுமதிக்கமாட்டார்கள். அழுவார்கள், சண்டையிடுவார்கள். ஏனெனில் இங்குச் சிகிச்சை பெறும் அனைத்துக் குழந்தைகளும் 12 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். அவர்களை சமாதானப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காகவே எனது ஸ்மார்ட்போனில் அவர்களுக்குப் பிடித்த சில வீடியோ கேம்களை பதிவு செய்து வைத்திருக்கிறேன். முதலில் அதைக் காண்பித்து விளையாடுக் காட்டி அவர்களுடன் நெருக்கமாவேன். அதன் பின்னர் அவர்களுக்கு என்னைப் பிடிக்கும் வகையில் நடந்து கொள்வேன். இதனைத் தொடர்ந்து அவர்களை நோக்கி வரும் போதே நான் வரும் போதே குழந்தைகள் குஷியாகி விடுவார்கள். இந்தக் காலகட்டத்தில் மட்டும் 100 மேல் டயாலிஸிஸ் சிகிச்சைகளை அளித்து விட்டேன்.


இதனையெல்லாம் மீறி அவர்கள் குணமடைந்து செல்லும் போது என்னிடம் பேசும் வார்த்தைகளும், அவர்களின் பெற்றோர்கள் கூறும் உணர்ச்சி மிகு வார்த்தைகள்தான் என்னை இன்று வரை இந்தத் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்ய வைக்கிறது. குறிப்பாக மருத்துவமனை நிர்வாகம், இந்த ஊரடங்கு காலத்தில் நான் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவமனை நிர்வாகத்தின் இயக்குநர் ரேமா சந்திர மோகன் எனக்காகச் செய்து கொடுத்தார். இதில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு.

image

உங்களின் பெற்றோர்களுக்கு இது குறித்துத் தெரிவித்தீர்களா?

ஆம். கொரோனா ஆரம்பமான காலத்திலிருந்து இப்போது வரை எனது அம்மா கூறுவது “ நீ எனக்கு ஒரே ஆம்பள புள்ள அதனால இங்க வந்துரு வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம்” என்பதைத் தான். தந்தைக்கு நிலைமை குறித்துப் புரிய வைத்து விட்டேன். இருந்த போதிலும் பாதுகாப்பாக பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார்.

 

இதனையடுத்து எழும்பூர் மருத்துவமனையின் இயக்குநர் ரேமா சந்திர மோகனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

image

அவர் பேசும் போது “ஆரம்பத்திலிருந்தே தம்பி மிக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தான். அதுவும் இந்த கொரோனா காலத்தில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விடுப்பு எடுக்காமல் அவன் பணியாற்றியது அவனது மருத்துவ தொழிலில் மிக முக்கியமான ஒன்று. காரணம் என்னவென்றால் மூத்த மருத்துவர்கள்தான் நோயாளிகளுக்காக இவ்வளவு மெனக்கெடுவார்கள். ஆனால் 23 வயதிலேயே அவன் இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்துள்ளான்.

image

 

அதனால் தான் அவனைப் பாராட்டும் வகையில் அவனுக்கு விருது வழங்கி கவுரவித்தோம். அந்தச் சமயம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கரும் மருத்துவமனைக்கு வந்து விட்டார். இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன் அவரும் தன் பங்குக்கு விருதையும் காசோலையையும் வழங்கி அவரது பாராட்டுகளையும் தம்பி துரைக்குத் தெரிவித்தார்” என்றார்


Advertisement

Advertisement
[X] Close