Published : 04,Jun 2020 06:16 AM
புதுக்கோட்டை: சிறுமியை நரபலி கொடுக்க யோசனை கூறிய மந்திரவாதி உள்ளிட்ட இருவர் கைது

புதுக்கோட்டை அருகே சிறுமியை நரபலி கொடுக்க யோசனை கூறிய பெண் மந்திரவாதி உள்ளிட்ட இரு பெண்களை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த வித்தியா என்ற 13 வயது சிறுமி கடந்த மாதம் 18-ம் தேதி நரபலி செய்யப்பட்டார். பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு சிறுமியின் தந்தையே தனது இரண்டாவது மனைவி மற்றும் உறவினர் ஒருவர் உதவியோடு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 8 தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, பெற்ற மகளையே ஈவு இரக்கமின்றி கொலை செய்த பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்ட பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி கடந்த 30ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்ததால் போலீசாருக்கு விசாரணையை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து பன்னீர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் குமார் ஆகியோரை நேற்று முன்தினம் புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பெற்ற மகளை கொலை செய்தால் செல்வ செழிப்போடு வாழலாம் என்று பன்னீருக்கு யோசனை வழங்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த மந்திரவாதி வசந்தி மற்றும் உதவியாக இருந்த முருகாயி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மந்திரவாதி எனக் கூறப்படும் வசந்தி இதற்கு முன்பு வேறு ஏதேனும் நரபலி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா? எதற்காக இந்த பூஜைகள் நடத்தப்பட்டது? பன்னீருக்கும் மந்திரவாதி வசந்திக்கும் என்னவிதமான தொடர்பு? என்னென்ன பொருட்கள் பூஜைக்கு பயன்படுத்தப்பட்டது? அந்த பூஜை நரபலிக்காக நடத்தப்பட்ட பூஜை தானா? என்பது குறித்தும் போலீசார் வசந்தியிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வசந்தி முரண்பட்ட தகவல்களை கூறி வந்ததால் போலீசார் அவரை கைது செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பெண் போலீஸ் அதிகாரி உதவியோடு தனிப்படை போலீசார் மேற்கொண்ட கிடுக்கிபிடி விசாரணையில் மந்திரவாதி வசந்தி சிறுமியை நரபலி கொடுப்பதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மந்திரவாதி மற்றும் அவருக்கு துணையாக இருந்த முருகாயி ஆகிய இரு பெண்களை கைது செய்த தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.