Published : 03,Jun 2020 10:13 AM
"தோனி வருவார் எனக் காத்திருக்கிறோம் " - முகமது ஷமி !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் விளையாட நாங்கள் காத்திருக்கிறோம் என்று இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் விமர்சகரும் ஊடகவியாளருமான ரோஹித் ஜூக்லானுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய முகமது ஷமி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்தார். அதில் தோனி குறித்தும் உரையாடினார் அப்போது "தோனியின் தலைமையின் கீழ் ஐபிஎல் போட்டிகளை தவிர அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறேன். தன்னுடைய அணி வீரர்களை வழி நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. நாம் தோனியுடன்தான் பழகுகிறோம் என்ற எண்ணமே நமக்கு வராது, அப்படி சக வீரர்களை நடத்துவார் அவர்" என்றார்.
மேலும் தொடர்ந்த முகமது ஷமி " தோனி மிகப் பெரிய வீரர். அவருடன் ஏராளமான நினைவுகள் என்னிடம் இருக்கிறது. இப்போதும் தோனி வருவார் அவருடன் விளையாட வேண்டும் என நினைக்கிறோம். அவருடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் சக வீரர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். பின்பு நள்ளிரவு வரை அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். இதையெல்லாம் மிகவும் மிஸ் செய்கிறேன்" எனக் கூறியுள்ளார் அவர்.