Published : 03,Jun 2020 06:24 AM
”இறந்த தாயின் போர்வையை இழுத்து அழுத குழந்தை” - உதவ முன் வந்த பாலிவுட் நடிகர்...!

இறந்த தாயின் போர்வையை இழுத்து அழுத குழந்தைக்கான, அனைத்து உதவிகளையும் செய்ய பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் முன்வந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பீகாரின் முசாபர்பூர் ரயில் நிலைய நடைமேடையில் புலம் பெயர்ந்த பெண் ஒருவர் இறந்து கிடக்க, அவரது குழந்தை அவரின் மீது கிடந்த போர்வையை இழுத்து அழுது எழுப்ப முயன்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். உணவு கிடைக்காமல் அவர் இறந்ததாக அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தக் குழந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நடிகர் ஷாரூக்கான் தனது அறக்கட்டளையான மீர் மூலம் உதவ முன்வந்துள்ளார். இது குறித்து மீர் அறக்கட்டளை அதனது ட்விட்டர் பக்கத்தில் “ நாங்கள் குழந்தையை சென்றடைய உதவிய அனைவருக்கும் நன்றிகள். தாயை எழுப்ப குழந்தை அழுத வீடியோ எல்லோரையும் மனமுடைய செய்து விட்டது. அவரது தாத்தாவின் அரவணைப்பில் இருந்த அந்தக் குழந்தைக்கு தற்போது நாங்கள் உதவ முன்வந்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளது.
Thank you all for getting us in touch with the little one. We all pray he finds strength to deal with the most unfortunate loss of a parent. I know how it feels...Our love and support is with you baby. https://t.co/2Z8aHXzRjb
— Shah Rukh Khan (@iamsrk) June 1, 2020
இது குறித்து ஷாரூக்கான் பதிவிட்டுள்ள பதிவில் “ சிறு குழந்தையை அடைய உதவி செய்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள். பெற்றோரை இழந்த அந்தக் குழந்தைக்கு இதைத் தாங்குவதற்கான மனவலிமை கிடைக்க நாம் பிரார்த்தனை செய்வோம். எனக்கு அந்த வலியின் ரணம் தெரியும். எங்களது அன்பும் அரவணைப்பும் குழந்தைக்கு எப்போதும் இருக்கும். என்று பதிவிட்டுள்ளார்.