Published : 19,Jun 2017 03:39 AM
வைஃபை ட்ரீ திட்டம் அறிமுகம்: இளைஞர்கள் உற்சாகம்

கோவையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பாக சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய வைஃபை ட்ரீ என்னும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள கோவை மாநகராட்சி, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தொடங்கப்பட்டுள்ள வைஃபை ட்ரீ திட்டத்திற்கு, கோவை மாநகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சூரிய ஆற்றலைக் கொண்டு இயங்கும் இந்த வை-ஃபை ட்ரீயில், நாள் ஒன்றுக்கு 9 யூனிட் மின்சாரம் பெறப்பட்டு அதன் மூலம் ஒன்பது தெரு விளக்குகளை எரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
ஒரு வைஃபை ட்ரீ அமைக்க மூன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் என்பதால், அதனை ஈடுகட்டும் வகையில் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மொபைல் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளதால், வைஃபை ட்ரீ திட்டம் இளைஞர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கோவை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சியை டெல்லியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையம் பாராட்டியுள்ளது.