[X] Close

ஆன்லைன் வகுப்புகள் அனைத்து தரப்பிற்கும் போய்ச் சேருமா? - ஆசிரியர் சங்கப் பொதுச்செயலர்

சிறப்புச் செய்திகள்

petric-raymond-said-about-online-classes

 


Advertisement

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும் மட்டும் வரும் ஜூன் 15ம் தேதி பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து நீட்டித்து வருவதால், மீண்டும் பள்ளிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை உள்ளது. தனியார்ப் பள்ளி, கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

தனியார்ப் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் தனது பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து புதிய விளக்கத்தை அளித்தார். அதாவது ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரச்சொல்லி வகுப்புகளை எடுக்கக்கூடாது எனத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், “ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நாம் தடுக்க முடியாது. மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தனியார்ப் பள்ளிகள் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தக் கூடாது. தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதை நாம் தடுக்க முடியாது” என்று அமைச்சர் தெரிவித்தார்.


Advertisement

மே 19 ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு ...

 இந்தக் கொரோனா பரவலின் தாக்கத்தில் பல கூலித்தொழிலாளர்களின் மாணவர்கள் உணவுக்கே ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கோ, கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கோ எந்த வகையில் சாத்தியம் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழாமல் இல்லை. வாய்ப்பு இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நிலையினால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாகப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...!


Advertisement

கேள்வி: கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதை ஆசிரியர்கள் சங்கம் எப்படிப் பார்க்கிறது?

பதில்: மாணவர்கள் கல்வி நலன் முக்கியம்தான். ஆனால் அதைவிட மாணவர்களின் உடல்நலம் முக்கியமானது. இந்த அசாதாரண சூழ்நிலையில் அவசரப்பட்டு சூழ்நிலைகளைக் கையாளமுடியாது. பல்வேறு சூழ்நிலைகளிலிருந்து மாணவ, மாணவிகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் என்று கணக்கிட முடியாது. குழந்தைகளுக்கு பெரும்பாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவே இருக்கும். எளிதில் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு போதிய உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவுகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் வெளிவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் தற்போது தங்களின் சொந்த ஊருக்குக் கூட சென்றிருக்கலாம். எனவே மேல்தட்டு முதல் கீழ்த்தட்டு மாணவர்களின் நிலை குறித்து முதலில் கண்டறிய வேண்டும். அவற்றைக் கணக்கிட்டு அவர்களின் உடல்நலனைக் கணக்கிட்டு பின்னர் தெளிவான திட்டமிடல் வேண்டும். அதுவரை வகுப்புகள் தொடங்காமல் இருப்பதே நல்லது.

இந்தப் பதற்றமான சூழ்நிலைகளைத் தாண்டியபிறகு வகுப்புகள் தொடங்க வேண்டும். அதற்கு முன்னர் ஆசிரியர்களுக்குத் தகுந்த பயிற்சி வேண்டும். கைகழுவுதல், பள்ளிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தனிமனித இடைவெளி போன்ற சுகாதார ரீதியாகப் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். கொரோனா தாக்கம் முடிந்த பிறகும் கூட சிப்ட் முறையில் பள்ளிகளை நடத்த வேண்டும். கொரோனா தாக்கம் முழுவதும் நீங்கும்வரை 5 ஆம் வகுப்பு வரை குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். சுகாதார ரீதியாக அனைத்தும் தயாரானதும் சுகாதாரத்துறை வழிகாட்டுதல் படி பள்ளிகளை இயக்க வேண்டும்.

image 

கேள்வி : மாணவர்கள் இந்த பொது முடக்கத்தை எப்படிக் கழித்து வருகிறார்கள்?

பதில் : தற்போது உள்ள மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்கள் கிடையாது. தங்களின் நேரத்தை பெரும்பாலும் செல்போன், டிவி, இண்டர்நெட் போன்றவற்றில்தான் செலவழிக்கிறார்கள். படிப்பு, புதிய விஷயங்கள் தெரிந்து கொள்வது போன்றவற்றிற்குக் குறைவான நேரங்களையே ஒதுக்குகிறார்கள். பெற்றோர்கள் அதைக் கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கு நல்ல விஷயங்களின் பக்கம் திருப்ப வேண்டியது கடமையாக உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளைக் கண்காணிக்கத் தவறக்கூடாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு என்ன பிடிக்கிறது, என்ன பிடிக்க வில்லை என்பதைத் தெரிந்து அவர்களுக்குப் பிடித்ததைக் கால அளவோடு சொல்லித்தர வேண்டும்.

தனிமையும் வாய்ப்புமே ஒருவரைக் குற்றவாளியாக்குகிறது. அதற்கு முதலில் பெற்றோர்கள் வாய்ப்பு தரக்கூடாது. ஒன்றாகக் கூடி இருந்து பிள்ளைகளைத் தனிமையிலிருந்து தவிர்த்தாலே அவர்கள் நல்வழி பெறுவார்கள்.

 

நாராயணா பள்ளிக் குழுமத்தின் ...

கேள்வி: ஆன்லைன் வகுப்புகள் கிராமப்புற மாணவர்களுக்குச் சாத்தியமா?

பதில்: கண்டிப்பாகச் சாத்தியமே கிடையாது. ஆன்லைன் வகுப்புகள் என்பது கற்றல் முறையில் ஒரு பகுதி. அதுவே முழுமையாக கற்றல் முறையாக ஆக முடியாது. இந்த ஆன்லைன் வகுப்புகளைச் சரியான கற்றல் முறை என ஏற்றுக்கொள்ளவே முடியாது. வீடியோவில் பேசுவதை மாணவர்கள் எவ்வளவு நேரம் கவனிப்பார்கள். வீடியோவை ஒரு மணி நேரம் பார்க்க முடியும். அதற்கு மேல் அவற்றை அவர்களால் எப்படிக் கவனிக்க முடியும்.

வேலைக்குச் சென்றால்தான் உணவு என்ற கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள் ஏராளமானோர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்கள் ஆன்லைன் வகுப்புகளை எப்படிப் பயன்படுத்த முடியும். அரசு நடத்தும் கல்வி தொலைக்காட்சி ஒரு லட்சம் பிள்ளைகளுக்குத் தான் சென்றடைவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒரு கோடியே 30 லட்சம் பிள்ளைகள் படிக்கின்றனர். வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே படிக்கட்டும். மற்றவர்கள் என்னமோ செய்து கொள்ளட்டும் என்றால் அதற்கு அரசு எதற்கு? கல்வி என்பது அனைத்து தரப்பட்ட பிள்ளைகளுக்கும் சமமாகச் சென்று சேர வேண்டும். அதுவே நல்லாட்சி முறை. எல்லா நாட்களுக்குமே இண்டர்நெட் வசதி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் மலைவாழ் பகுதி மாணவர்களுக்கும் சாத்தியமே கிடையாது.

கேள்வி : ஆன்லைன் வகுப்புகளைத் தனியார்ப் பள்ளிகள் வற்புறுத்துவதற்குக் காரணம் என்ன?

பதில்: ஆன்லைன் வகுப்புகளைத் தனியார்ப் பள்ளிகள் வற்புறுத்துவதற்குக் காரணம், அவர்களுக்கு அட்மிஷன் முக்கியம். நாங்கள் வகுப்புகளை நடத்துகிறோம் என்று பெற்றோர்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டும். பள்ளி பேருந்துகளை இயக்க தேவையில்லை. டீச்சர்கள் வீட்டிலிருந்தே வகுப்புகள் எடுப்பார்கள். படிப்புக்குத் தேவையான டூல்ஸ்களை அவர்களே தயார் செய்து கொள்வார்கள். லாபம் அடையவே இவ்வாறு ஆன்லைன் வகுப்புகளை முன்னெடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் என்ன புரியும். ஏற்கெனவே ஏப்ரல் மாதம் வரை பெற்றோர்களிடம் கட்டணம் வாங்கியிருப்பார்கள். ஆனால் வகுப்புகள் மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இது மேலும் அவர்களுக்கு லாபம்தான். ஆனால் பெரும்பாலான தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவில்லை. அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கு என்ன செய்வார்கள். எந்த வகையில் அவர்கள் குடும்பத்தை வழிநடத்துவார்கள். இவற்றையெல்லாம் தனியார்ப் பள்ளிகள் எண்ணிப்பார்ப்பதில்லை.

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ...

கேள்வி : ஆன்லைன் வகுப்புகளில் உள்ள பிரச்னைகள் என்ன?

பதில் : ஆன்லைன் வகுப்புகளில் கலந்துரையாடல் இருக்காது. அரசு சொல்லும் கல்வி தொலைக்காட்சிக்கு என்று ஒரு சென்டர் இருக்கிறது. அந்தப் பள்ளியில் தான் அவற்றை ஒளிபரப்புகிறார்கள். அங்கு மாணவர்கள் வந்தால்தான் பார்க்க முடியும். இல்லையேல் பார்க்க முடியாது. கல்வி தொலைக்காட்சியைப் பார்த்து ஒரு சந்தேகம் என்றால் அதில் மாணவர்கள் எப்படி கேள்வி கேட்டு விளக்கம் பெற முடியும். ஆன்லைன் வகுப்புகளில் ஒரு பொருளைக் காண்பிக்கிறார்கள் என்றால் அதை மாணவர்களால் எப்படித் தொட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ள முடியும். இதுபோன்று பல பிரச்னைகள் உள்ளன.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் ...

 கேள்வி : வகுப்பு திட்டமிடலில் அரசு குழம்புகிறதா?

பதில் : அரசுக்குத் தெளிவான நிலைப்பாடு இல்லை. மக்களின் பொருளாதார நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். அமைச்சர் பேசும்போது முதலில் ஆன்லைன் வகுப்புகள் கூடாது என்கிறார். பின்னர், அதை எப்படித் தடுக்க முடியும் என்கிறார். கொரோனா தாக்கம் முடியும் வரை தனியார்ப் பள்ளிகள் அட்மிஷனுக்கோ, கட்டணம் வசூலிக்கவோ அரசு அனுமதிக்கக் கூடாது.

கேள்வி: மாணவர்களின் கல்வி குறித்த வாழ்க்கைக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?

பதில்: அரசுக்குப் பல பரிந்துரைகளைக் கொடுத்துள்ளோம். அதை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசு முதலில் தெளிவாகத் திட்டமிட வேண்டும். அனைத்து தரப்பு மாணவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், சுகாதார அதிகாரிகள், கல்வி அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது.

image

கேள்வி : வீட்டில் இருக்கும் நாட்களில் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?

பதில் : ணவர்கள் புதுப்புது விதமான கற்றல் முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். செல்போன்களை சற்று தள்ளிவைத்துவிட்டு பழைய சிந்தனைத் திறன் மிக்க கற்றல் வழிகளைப் பின்பற்றலாம். தற்போது உள்ள மாணவர்களுக்கு ஞாபக சக்தி என்பது மிகவும் குறைந்துவிட்டது. அதற்காக ஆங்கில வார்த்தைகள் பேசி பழகுவது, விளையாட்டு, ஓவியக்கலை பயிற்சி போன்ற கலைத்திறன்களில் ஈடுபடலாம். வாய்ப்பாடுகள் படிக்கலாம். முன்பெல்லாம் கடிதம் எழுதும் முறை இருந்தது. ஆனால் தற்போது அவையெல்லாம் இல்லை. எழுதல் பயிற்சிகள், அறிவியல், பொது அறிவு, செய்தித்தாள்கள் வாசித்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவற்றையெல்லாம் பெற்றோர்களே வழிநடத்தலாம். கணித புதிர்கள், யோசிக்கக் கூடிய விளையாட்டுகள் ஆகியவை மனப்பாட சக்திக்கு வழிவகுக்கும். படிப்பு என்பதைப் புகுத்தாமல் புரிதல் முறையாகக் கற்க மாணவர்களை வழிநடத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் படிப்பதிலும் கற்பதிலும் ஈடுபாடு வரும்.


Advertisement

Advertisement
[X] Close