Published : 18,Jun 2017 12:39 PM

சோகத்தில் முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை சதங்கள் 

Sad-champions-Trophy-centurys

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த அணிகள் தோற்றதே இதுவரை வரலாற்றில் பதிவாகியுள்ளது. 
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமன், சதமடித்து அந்த அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல் சதமடித்த அவர் 114 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த சதத்தினையும் சேர்த்து சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 4 சதங்கள் பதிவாகியுள்ளது. அவற்றில் இந்த போட்டியைத் தவிர முதல் இன்னிங்ஸில் சதமடிக்கப்பட்ட மற்ற 3 போட்டிகளிலும், அந்த குறிப்பிட்ட அணி தோல்வியையே தழுவியுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியின் சவுரவ் கங்குலி முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐசிசி நாக் அவுட் தொடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கங்குலியின் 117 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 264 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதேபோல, 2004ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தில் டிரஸ்கோதிக் சதமடித்தார். அந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 217 ரன்கள் இலக்கினை வெற்றிகரமாக சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றது. இந்த போட்டி 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் இதே ஓவல் மைதானத்தில் நடந்தது. கடந்த 1998 வில்ஸ் இண்டர்நேஷனல் கோப்பை என்ற பெயரில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் வாலெஸ் சதமடித்தும், அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்க அணியிடன் தோற்றது.