வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் தேவை இல்லை: மாணவர்கள் போராட்டம்

வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் தேவை இல்லை: மாணவர்கள் போராட்டம்
வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் தேவை இல்லை: மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாடி வாசல் திறக்கும் வரை வீடு வாசல் தேவை இல்லை என அவர்கள் முழக்கமிட்டனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மெட்ரஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில்‌ தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் அண்ணா சாலையில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோட்டை வழியாக‌ச் சென்று காந்தி சிலை முன் மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில், கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரோடியர் மைதானத்தில் குவிந்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருவதால் மைதானத்தைச் சுற்றி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு‌ ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே மாணவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி வந்திருந்தனர்.

பெரும்பாலான மாணவர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். பீட்டா அமைப்பைத் தடை செய்து, ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறினர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மீன் மார்க்கெட் அருகில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் செல்வம் திரையரங்கம் வரை பேரணியாகச் சென்றனர். அங்கிருந்து தஞ்சை சாலையில் ஒன்றுகூடி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com