Published : 18,Jun 2017 07:00 AM

சென்னை தம்பதி மீது டெல்லி அருகே துப்பாக்கிச் சூடு!

Gun-Shot-on-Chennai-Couple-in-Delhi

புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதி மீது டெல்லி அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராமாவரத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா குமார். இவர் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களின் நண்பர் ஷ்யாம் தேஜா. இவர்கள் மூவரும் ஹரித்துவாருக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அதன்படி விமானத்தில் டெல்லி சென்ற இவர்கள், அங்கிருந்து இரண்டு புல்லட் பைக்குகளை வாடகைக்கு எடுத்தனர். ஒரு புல்லட்டில் ஆதித்யாவும் விஜயலட்சுமியும் செல்ல, மற்றொரு வண்டியில் தேஜா சென்றார். ஹரித்துவார் சென்றுவிட்டு நேற்று மாலை டெல்லி திரும்பினர். இன்று சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தனர்.

மாலை நான்கு மணியளவில் பைக் உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் அருகே, தேசிய நெடுஞ்சாலை 58-ல் வந்துகொண்டிருந்தபோது, ஒரு துப்பாக்கி குண்டு ஆதித்யாவின் கழுத்தில் திடீரென்று பாய்ந்தது. என்ன ஏதென்று நினைப்பதற்குள்ளாகவே ஆதித்யா குமார் வண்டியோடு கீழே சாய்ந்தார். இதில் பின்னால் இருந்த அவர் மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேஜா, டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கிருந்த சிலர் உதவியுடன் இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘ஆள் மாறாட்டம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்ததா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்