Published : 23,May 2020 09:02 AM

ஆர்.எஸ். பாரதி கைது.. பழிவாங்கலா? சட்ட ரீதியிலான நடவடிக்கையா..? தலைவர்கள் சொல்வது என்ன?

admk-and-dmk-talk-about-r-s-bharathi-arrest

சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர்

image

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞரும் காவல் துறையினரும் ஆஜராகினர். அப்போது காவல்துறையினர் தரப்பில், ஆர்.எஸ்.பாரதியை காவலில் விசாரிக்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தனர். ஆனால் ஏற்கெனவே இதுகுறித்த வழக்கை முடித்து வைக்கக்கோரி ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கூடாது என ஆர்.எஸ்.பாரதி தரப்பு தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கைது குறித்து ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ஓபிஎஸ் செய்த ஊழலை பற்றி புகாரளித்தேன். யாரையோ திருப்திப்படுத்த என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நிற்காது.” எனத் தெரிவித்தார்.

இதனிடையே ஆர்.எஸ்.பாரதியின் கைதுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக எம்.எல்.ஏ செம்மலை கூறும்போது, “மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை. அது வேறு விவகாரம், இது வேறு விவகாரம். அந்த விவகாரத்துக்காக கைது நடவடிக்கை என்று சொன்னால் அதை ஒப்புக்கொள்ள முடியாது. சட்டம் தன் கடைமையை செய்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஏற்கெனவே அவர் பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தி பேசியது, நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியது, அதுவும் ஊடகத்தின் மத்தியில் வெளிப்படையாக பேசியது குறித்து புகார் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Former Minister semmalai || கூவத்தூரில் நடந்தது ...

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது என்பது காவல்துறை நடவடிக்கை. இதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. அரசியல் நோக்கத்தோடு ஒவ்வொரு கருத்தும் சொல்லிவருகிறார்கள். அவர்கள் அரசின் மீதும் காவல்துறையின் மீதும் பழி போடுவதற்கு இதை சாக்காக எடுத்துக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் சொல்லுகிற கருத்தை நிதானித்து பேச வேண்டும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். எச்சரிக்கையாக பேச வேண்டும். அனைத்து தரப்பினரும் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

டி ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் திமுக ...

ஆர்.எஸ்.பாரதியின் கைது நடவடிக்கை குறித்து திமுக எம்.பி டி.ஆர். பாலு கூறுகையில், “ஆர்.எஸ்.பாரதியின் கைது நியாயமற்றது. அநியாயம். அக்கரமம். தேவையில்லாத வேலை. கொரோனா தடுப்பு பணியை செய்யாமல் இதை செய்து கொண்டிருக்கிறார்கள். திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் முயற்சி இது. போலீசுக்கு வேறு வேலை இல்லையா? அரசாங்கம் சொல்லி போலீஸ் இதை செய்கிறது.”என்றார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் பேசுகையில், “இது தயாநிதிமாறன் குடும்பத்துக்கு விடுக்கும் எச்சரிக்கையாக கூட பார்க்க முடிகிறது. ஒருவரை டார்கெட் செய்து விட்டால் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி கைது செய்ய முடியும் என்பதை காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது கூட இதேபோன்ற நடவடிக்கை பாய்ந்தது. தேர்தல் வரும் சமயத்தில் ஒரு முக்கியமான இலக்கை நோக்கி தமிழக அரசு செல்வதை புரிந்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் சில விஷயங்களை நமக்கு சொல்கிறது” எனத் தெரிவித்தார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்