Published : 18,May 2020 08:53 AM
சத்தீஸ்கர் : மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து நேற்று மாலை மாநில உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டதாக மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த அறிவிப்பில், அனைத்து 28 மாவட்டங்களின் ஆட்சியர்களும் சமர்ப்பித்த அறிக்கையின்படி, நிலைமை இன்னும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் மேலும் பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மே 31 வரை மாநிலத்தில் உணவகங்கள், ஹோட்டல் பார்கள் மற்றும் கிளப்புகள் மூடப்படும், அதே நேரத்தில் விளையாட்டு வளாகங்கள் மற்றும் அரங்கங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும்” எனத் தெரிவித்தார்.
நேற்று மட்டும் 25 புதிய கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை சத்தீஸ்கர் மாநிலத்தில் 92 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 59 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.