Published : 14,May 2020 01:39 PM
விஷம் அருந்திய தாயை விடியவிடிய வீட்டிலேயே வைத்திருந்த மனிதநேயமில்லாத மகன்

விஷம் அருந்திய தாயை மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் அவர் துடிதுடித்து உயிரிழந்தாக புகார் எழுந்துள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி அருமைக் கண்ணு (70). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ராகவன், வீரமணி என்ற 2 மகன்கள் உள்ளனர். ராகவனுக்குத் திருமணமாகி மங்கையர்க்கரசி என்ற மனைவியும், வீரமணிக்குத் திருமணமாகி கண்ணகி என்ற மனைவியும் உள்ளனர்.
அருமைக்கண்ணு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். முதுமையின் காரணமாக அவரால் வேலைக்குச் செல்ல முடியாததால் மூத்த மகன் ராகவன் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால் அங்கு அவருக்குச் சரிவர உணவு வழங்கப்பட வில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து தனது இளைய மகன் வீரமணியின் வீட்டில் தங்கியுள்ளார். அங்கும் அவருக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அருமைகண்ணு அருகில் உள்ளத் தோப்பில் அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். இதனைப் பார்த்த கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர். அருமைக்கண்ணுவை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஊருக்கு வந்த போது, அருமைக்கண்ணுவுடன் வர அவரது மகன்கள் முன் வராததால் ஆம்புலன்ஸ் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கேள்விப்பட்ட திருவெண்காடு காவல்துறையினர் அருமைக்கண்ணை சிகிச்சைக்குக் கொண்டு செல்ல இரு மகன்களையும் அறிவுறுத்தினர். இதனையடுத்து தாயை தன்னுடன் அழைத்துச் சென்ற வீரமணி, அருமைக்கண்ணுவை மருத்துவமனை அழைத்துச் செல்லாமல் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். உரியச் சிகிச்சை கிடைக்காமல் இரவு முழுவதும் துடிதுடித்த மூதாட்டி அருமைக்கண்ணு இன்று அதிகாலை வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.