Published : 13,May 2020 02:56 PM

வியாபாரிகளின் பழங்களை வீதியில் எறிந்த வாணியம்பாடி ஆணையர் மாற்றம்

-Was-Stressed---Tamil-Nadu-Officer-Explains-Toppling-Fruit-Cart-On-Camera
வாணியம்பாடியில் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் பழங்களை வீதியில் வீசி வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கத்தை சில தளர்வுகளுடன் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அந்தத் தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தனியார் கடைகள், நடமாடும் காய்கறி மற்றும் பழக்கடைகள் உள்ளிட்டவை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நாற்பது நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கியிருந்த வியாபாரிகள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

image

 

இதில் சிலர் ஊரடங்கு விதிகளை மீறியும் கடைகளை நடத்தி வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில் வாணியம்பாடியில் சாலையோரங்களில் கடைகள் நடத்துபவர்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்றதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து தகவலறிந்து சாலைக்கு வந்த நகராட்சி ஆணையர் அவர்கள் விற்றுக்கொண்டிருந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாலையில் தூக்கி வீசினார். இது தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகியது. பலரும் மனிதாபிமானமே இல்லாமல் இந்த அதிகாரி நடந்து கொண்டதாகப் புகார் கூறினர். மேலும் இது குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

image

 

இதனிடையே இது குறித்து வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர், “ நான் அப்படி நடந்துகொண்டதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அவர்களிடம் பல முறை வலியுறுத்தியிருக்கிறேன். சந்தை என்பது நடமாடும் கடைகளுக்கானது அல்ல. அங்கிருந்த நபர்களில் பலர் முகக்கவசம் அணியவே இல்லை. சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கப்படவில்லை. இது நிச்சயம் கொரோனா தொற்றுக்கு வழி வகுக்கும்” என்றார்.

இந்நிலையில் சிசில் தாமஸ் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மேல் விஷாரம் நகராட்சி பொறியாளர் பாபு வாணியம்பாடி நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்