Published : 10,May 2020 10:47 AM
“டெல்லி மக்கள் கொரோனாவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்” - அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்

டெல்லி மக்கள் கொரோனா வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி உரையின் மூலம் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று காணொளி மூலம் பேசினார். அப்போது, “டெல்லியில் இதுவரை கொரோனா நோயிலிருந்து 2,069 பேர் குணமடைந்துள்ளனர். 73 பேர் இறந்துள்ளனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் இறந்தவர்களில் 82 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த நோயால் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆகவே டெல்லி மக்கள் கொரோனா வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்”என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இப்போது 1,463 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் நோயின் அறிகுறியே இல்லாதவர்கள். சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அனைத்து நோயாளிகளும் குணமடைய நாங்கள் கடுமையாக முயற்சி எடுத்து வருகிறோம். இவர்களை வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்க முடியும். எங்கள் அணியினர் அவர்களது வீடுகளுக்குச் செல்கின்றனர். அப்போது எல்லா நெறிமுறைகளும் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதிசெய்கின்றனர். தினமும் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டுள்ளோம்.

அத்தகைய நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளில் தனி அறைகள் இல்லையென்றால், அவர்கள் கொரோனா பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வசதிகளை வலுப்படுத்த, தனியார் ஆம்புலன்ஸ்களையும் பணிக்காகச் சேர்த்துக் கொண்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.