
மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதலே நாட்டின் பகுதிகளில் வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். இப்படி பல நூறு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற தொழிலாளர்களில் சிலர் உயிரிழக்கவும் செய்தனர். தெலங்கானா மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கருக்கு தன்னுடைய குடும்பத்துடன் நடந்தே சென்ற ஜமாலோ என்ற சிறுமி உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்திலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி சென்ற தொழிலாளர்கள் இரவில் தண்டவாளத்தில் தூங்கியுள்ளனர்.
நடந்தே சென்றதால் ஏற்பட்ட சோர்வு காரணமாக தொழிலாளர்களில் பலர் தண்டவாளத்திலேயே உறங்கிய போது அவர்கள் மீது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டரில், “மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் விபத்து குறித்து பேசினேன். அவர் நிலைமையை கண்காணித்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.