Published : 07,May 2020 02:42 PM
"கொரோனா பரவல் இரட்டை கோபுரத் தாக்குதலை விட மோசமானது" - ட்ரம்ப் !

கொரோனா பரவல், இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,073 பேர் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 12 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், கொரோனா பரவல் மோசமான தாக்குதல் என்றும் இது போன்ற தாக்குதலை உலகம் ஒருபோதும் சந்தித்தது இல்லை என்றும் தெரிவித்தார். கொரோனா பரவலைச் சீனா ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் எனக்கூறிய அவர், சீனாவைக்காட்டிலும் அமெரிக்காவிலேயே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் இது கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதல் என வேதனை தெரிவித்தார்.
இந்த கொரோனா பரவல் இரண்டாம் உலகப்போரில் பியர்ல் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பானிய குண்டுத் தாக்குதல் மற்றும் இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது என்றும் அதிபர் ட்ரம்ப் கூறினார்.