Published : 02,May 2020 02:36 PM
‘ஊரடங்கால் மிட்டாய் விற்பனை இல்லை’ - 114 வயதில் உழைத்துச் சாப்பிடும் ‘மிட்டாய் தாத்தா’

114 வயதான தாத்தா ஒருவர் இந்த ஊரடங்கு காலத்தில் தேங்காய் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் 114 வயது முகமது அபுசாலி தாத்தா. பர்மாவில் வசித்து வந்த இவர், அங்கு நடந்த போரில் தனது குடும்பத்தினர் இறந்து விட்டதால் வேறு நாட்டிற்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தனது 50 வயதுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்தார். சென்னை வந்து சேர்ந்த அவர் சென்னையிலிருந்து நடந்து பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து நடைப்பயணமாகத் தஞ்சாவூருக்குச் சென்றார்.

தனது உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தஞ்சாவூரில் தனது உழைப்பை மட்டுமே நம்பி, குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களைச் சொந்தமாகத் தயாரித்து விற்கத் தொடங்கினார். வீதி வீதியாக நடந்து சென்று அதனை வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி, வாழ்க்கையை நடத்தி வருகிறார். தள்ளாத இந்த வயதில் தனது சொந்த மூலதனத்தைக் கொண்டு யாரிடமும் கையேந்தாமல் தனது உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இவர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. இந்த வயதில் குறைந்த வருமானமே ஈட்டி வாடகை ஷெட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் சொந்தமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இவரை அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிட்டாய் தாத்தா என்றே கூப்பிடுகின்றனர். இது குறித்து மிட்டாய் தாத்தா கூறும்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே சென்று மிட்டாய் விற்க முடியாது. இதற்காக யாரிடமும் கையேந்தாமல் சொந்தமாகத் தொழில் செய்வதற்காக வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்து வருகிறேன் என்கிறார்.
மேலும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தால் யாரிடமும் கையேந்தாமல் வாழ்வதாக இந்த மிட்டாய் தாத்தா கூறுகிறார்.