8 மணி நேர வேலை - சிகாகோ நகரில் உருவான போராட்டத் தீ...! - மே தினம்...!

8 மணி நேர வேலை - சிகாகோ நகரில் உருவான போராட்டத் தீ...! - மே தினம்...!

8 மணி நேர வேலை - சிகாகோ நகரில் உருவான போராட்டத் தீ...! - மே தினம்...!

ஒரு நாற்காலியில் இருந்து உழைப்பை நீக்கிவிட்டால் அது மரம். சிற்பத்தில் இருந்து உழைப்பை நீக்கிவிட்டால் அது கல். உங்கள் சட்டையில் இருந்து உழைப்பை நீக்கிவிட்டால் அது பருத்தி. உங்கள் செருப்பில் இருந்து உழைப்பை நீக்கிவிட்டால் அது வெறும் ரப்பர். இப்படியாக நம் வாழ்வில் அனைத்துமே உழைப்பால் உருவானது. உழைப்பாளிகளால் உருவானது. உழைப்பாளிகள் இன்றி இந்த உலகம் இல்லை. தொழிலாளர்கள் இன்று பெற்றிருக்கும் உரிமைகள் எல்லாம் அத்தனை எளிதாக அவர்களுக்கு கிடைத்தது அல்ல. பெரிய போராட்டம் மற்றும் உயிர் தியாகத்தின் பலனாகவே இன்று தொழிலாளர்கள் ஓரளவிற்கேனும் உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

சிகாகோவில் நடந்த மாபெரும் தொழிலாளர் போராட்டமே இன்று 8 மணி நேர வேலை என்ற உரிமையை நாம் பெற்றிருப்பதற்கு காரணமாக அமைந்தது. அதன் பிறகும் கூட பல்வேறு உரிமைகளைப் பெற தொழிலாளர்கள் இன்று வரை போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர் என்ற போதும் அனைத்துக்கும் தாய் போராட்டமாக சிகாகோ போராட்டத்தைக் கூறலாம்.

அதற்கு முன்பு வரை தொழிலாளர்கள் 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டி இருந்தது. அமெரிக்கா ரஷ்யா என பல நாடுகளும் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டின. இதனால் பெரும் மனச் சோர்வு உடல் சோர்வுக்கு ஆளான தொழிலாளர்கள் ஒரு கட்டத்தில் வெகுண்டு எழுந்தனர்.

1886 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வேலை நேர குறைப்புக்கான போராட்டத்தில் இறங்கினர். மொத்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர் போராடினர். அதில் சிகாகோ நகரில் மட்டுமே 70,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமையினைப் பெறுவதற்காக ஒன்று கூடிய தொழிலாளர்களின் போராட்டம் வலுப் பெற்றது. போராட்டம் துவங்கிய நான்காம் நாலான மே 4’ஆம் தேதி கூட்டத்தில் போராட்டம் வெடித்தது. அதில் பல நூறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்த போராட்டத்தின் எதிரொலியாக தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமை உலகம் முழுக்க தொழிலாளர்களுக்கு படிப்படியாக கிடைத்தது.

1889 ஜூலை 14 ஆம் தேதி பாரிஸ் நகரில் சோசலிச தொழிலாளர்களின் சர்வதேச பாராளுமன்றம் கூடியது. அப்போது சிகாகோ நகர போராட்டத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அக் கூட்டத்திற்கு ஏங்கல்ஸ் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் தான் மே ஒன்று தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. மே தினத்திற்கு நீண்ட கால வரலாறு இல்லை. இந்த உரிமையினை எல்லாம் தொழிலாளர்கள் பெற்று இரண்டு நூற்றாண்டுகள் தான் ஆகிறது. 8 மணி நேரம் வேலை என்ற உரிமைச் சட்டம் ஒருபுறம் இருந்தாலும். இன்றும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பல அடிப்படை உரிமைகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராடத்தான் வேண்டி இருக்கிறது. உழைப்பை கொண்டாடுவோம். தொழிலாளர்களை போற்றுவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com