[X] Close

சென்னை - உழைப்பாளர் சிலையும்..., ம.சிங்காரவேலரும்...!

சிறப்புச் செய்திகள்

International-Workers--Day---Labour-Statue---Chennai

சிந்தனையாளர், சீர்திருத்தவாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் ம.சிங்காரவேலர். இவரே தென்இந்தியாவின் முதல் பொது உடைமைவாதியாக அறியப்படுகிறார்.
இந்தியாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர் இவர் என்றும் சொல்லப்படுகிறது. சிந்தனையில் மட்டுமல்ல தன் வாழ்விலும் சிறந்த பொது உடைமைவாதியாக
வாழ்ந்தவர் ம.சிங்காரவேலர்.

மார்க்ஸிய சிந்தனைகளை இந்திய சூழலுக்கு ஏற்ப மாற்றி அதற்கு செயல்வடிவம் கொடுத்த ம.சிங்காரவேலர். 1860’ஆம் ஆண்டு சென்னையில் ஒரு மீனவ குடும்பத்தில்
பிறந்தார். தன் இன மக்கள் ஒடுக்கப்படுவதைக் கண்டு அவர் சிறுவயது முதலே வருந்தினார்.

image


Advertisement

சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்த அவர் 1907’ஆம் ஆண்டு வழக்கறிஞராக தன் பணியைத் துவங்கினார். ஒரு முறை நீதிமன்றத்தில் எதிராளிகளால்
மீனவகுடும்பத்தைச் சேந்த ம.சிங்காரவேலர் அவமானப்படுத்தப்படுகிறார். தான் வாதாடிய அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளியே வந்த அவர் கறுப்பு
அங்கியை கழற்றிவிட்டு இனி நீதிமன்றத்தில் வாதாடப் போவதில்லை என் மக்களுக்காகவே பாடுபடப் போகிறேன் என்றார். சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918’ல்
இந்தியாவின் துவங்கியவர் ம.சிங்காரவேலர். அதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம். காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர் ஊர் ஊராகச் சென்று
ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற உழைத்தார்.

1923’ஆம் ஆண்டு லேபர் கிஷான் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியை துவங்கினார் அவர். அதோடு நில்லாமல் லேபர் கிசான் கெஜட் என்ற ஆங்கில வார இதழையும்,
தொழிலாளன் என்ற தமிழ்வார இதழையும் நடத்தினார். சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் ஒன்றாக செயல்படவேண்டும் என விரும்பினார்
ம.சிங்காரவேலர். அதனால் பெரியாரின் சிந்தனைகளுக்கு தன் ஆதரவை கொடுத்தார். பிரபஞ்ச பிரச்னைகள், பகுத்தறிவு என்றால் என்ன...?, விஞ்ஞானத்தின் அவசியம்
உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார் அவர்.

image


Advertisement

1923 ஆம் ஆண்டு மே மாதம் மெரீனா கடற்கரையில் தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டார் ம.சிங்காரவேலர். இந்தியாவில் முதல்
மே தினமும் சிங்காரவேலர் தலைமையில் அன்று தான் கொண்டாடப்பட்டது. அதன் நினைவாகவே பின்னாளில் அங்கு உழைப்பாளிகள் சிலை நிறுவப்பட்டது.
வங்காளத்தைச் சேர்ந்த தேவி பிரசாத் ராய் சௌத்ரி இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த வெண்கலச் சிலையானது 1959 ல் அப்போதைய ஆளுநராக இருந்த
விஷ்ணுராம் மேதி என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. சென்னையின் அடையாளங்களில் ஒன்று உழைப்பாளர் சிலை.

கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய ம.சிங்காரவேலர்., சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்த போது
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது ம.சிங்காரவேலருக்கு பத்து
ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டே ஆண்டுகளில் விடுதலையானார் அவர்.

image

மீனவ குடும்பத்தில் பிறந்து தன் இனமக்களுக்கும் ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் பாடுபட்டவர் ம.சிங்காரவேலர் எனவே தான் தமிழக அரசு மீனவர் வீட்டுவசதி திட்டத்திற்கு
அவரது பெயரை சூட்டி இருக்கிறது., மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ‘சிங்காரவேலர் மாளிகை’ என்றே அழைக்கப்படுகிறது.

தேசபக்தி, பொதுவுடைமை, மனிதாபிமானம், சீரிய சிந்தனைகள் என வாழ்ந்த ம.சிங்காரவேலர் சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் கூட ஆனால் இந்தியா விடுவலை
பெறுவதைப் பார்க்கும் அதிஷ்டத்தை சிங்காரவேலருக்கு காலம் வழங்கவில்லை. 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18’ஆம் நாளில் பிறந்த சிங்காரவேலர், இந்தியா விடுதலை
பெறுவதற்கு ஒரு வருடம் முன்பாக அதாவது 1946’ஆம் ஆண்டு இறந்தார். என்றாலும் என்றைக்கும் மனித குல வளர்ச்சிக்கு தேவையான சிந்தனைகளை விதைத்துவிட்டுப்
போனவர் அவர். மே தினமான இன்று தென்இந்தியாவின் முதல் பொது உடைமைவாதியான ம.சிங்காரவேலரை நினைவு கூர்வோம்.


Advertisement

Advertisement
[X] Close