
பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தரின் முயற்சியால் சிங்கப்பூரில் உயிரிழந்த கப்பல் என்ஜினியரின் உடல் 13 நாட்களுக்குப்பிறகு சொந்த ஊரான பெரம்பலூர் வந்தடைந்தது.
பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செந்தில்குமார் சிங்கப்பூரில் கப்பல் என்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் செந்தில்குமார் தாயகம் வந்து சிங்கப்பூர் திரும்பிய நிலையில் அங்கேயே கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனா முடக்கத்தால் சிங்கப்பூரில் இருந்து செந்தில்குமாரின் உடலை கொண்டுவரமுடியாமல் பரிதவித்த அவரது உறவினர்கள் பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து மத்திய அரசிடம் தொடர்ந்து பேசிய எம்.பி பாரிவேந்தர், செந்தில்குமாரின் உடலை பெரம்பலூர் கொண்டுவர முயற்சி செய்தார். அதனடிப்படையில் சிங்கப்பூரில் உயிரிழந்த செந்தில்குமாரின் உடல் விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து பெங்களூருக்கு நேற்று இரவு 7.30-மணிக்கு கொண்டு வரப்பட்டு, பெங்களூருலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இரவு 11-மணிக்கு கிளம்பிய ஆம்புலன்ஸ் பெரம்பலூர் வந்தடைந்தது.
செந்தில்குமார் உயிரிழந்து 13 நாட்களுக்குப்பிறகு அவரது உடல் பெரம்பலூர் வந்தடைந்தது. அவரது உடலை பார்த்து கதறிஅழுத உறவினர்கள் இக்கட்டான சூழலில் உடலை கொண்டு வர உதவி செய்த எம்.பி பாரிவேந்தருக்கு நன்றி தெரிவித்தனர்.