Published : 26,Apr 2020 04:45 PM
மாற்றுத்திறனாளி தாயைத் தோளில் சுமந்து சொந்த ஊருக்கு நடந்த மகன்

ஈரோடு அருகே மாற்றுத்திறனாளியான தனது தாயைத் தோளில் சுமந்தபடி மகன் ஒருவர் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் கிராமத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சொந்த கிராமத்தை அடைய 230 கி.மீ. தூர நடைப்பயணத்தை 15 பேர் கொண்ட விவசாயக்கூலித் தொழிலாளர்கள் குழு ஒன்று மேற்கொண்டது. மஞ்சள் அறுவடைக்காக ஊஞ்சலூரில் தங்கியிருந்த இவர்கள் ஊரடங்கால் மூன்று வாரங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கு அன்றாட உணவுக்கே சிரமம் ஏற்பட்டதால் நடந்தே சொந்த கிராமம் திரும்ப முடிவெடுத்துள்ளனர். இந்தக் குழுவுக்குச் சமையல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அவரது 18 வயது மகனே தோளில் சுமந்தே சொந்த ஊர் நோக்கி நடந்திருக்கிறார். பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் புதுவாய்க்கால் கரையில், 15 பேர் குழு உடைமைகளுடன் நடந்து செல்வதாகப் பேரூராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது அதிகாரிகள் விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கூலி வேலைக்காக ஊஞ்சலூர் கிராமத்திற்கு 2 மாதங்களுக்கு முன் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களுக்கு உணவு வழங்கிய அதிகாரிகள் வாகனத்தின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.