Published : 14,Jun 2017 04:33 PM

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்... இங்கிலாந்து ஏமாற்றம்

Pakistan-in-final-with-smashing-victory

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. 

கார்டிஃப் நகரில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கினை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 37.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி எட்டியது. பாகிஸ்தான் அணி தரப்பில் அசார் அலி 76 ரன்களும், ஃபகர் ஜமான் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாபர் ஆசம் 38 ரன்களும், முகமது ஹஃபீஸ் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் பால் மற்றும் ரஷீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் கலக்கிய பாகிஸ்தான் அணியினர், இங்கிலாந்து அணியை 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 46 ரன்களும், பாரிஸ்டோவ் 43 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி, தனது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் கூட விளாசவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளும், ஜுனைத் கான் மற்றும் அறிமுக வீரர் ரம்மன் ரயீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதியது இதுவே முதல்முறையாகும்.  சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி, அரையிறுதியுடன் வெளியேறியது.