Published : 14,Jun 2017 01:27 PM
வங்கதேசத்தில் நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு

வங்க தேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தில் பெய்த கன மழை காரணமாக, மலை மாவட்டங்களான சிட்டகாங், ராங்கமட்டி, பந்தர்பன் ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை ஏற்பட்ட நிலச்சரிவுகளில், 140 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவர்களில், 129 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிக அளவாக நிலச்சரிவுகள் ஏற்பட்ட ராங்கமட்டி மாவட்டத்தில் 103 பேர் பலியாகி உள்ளனர். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இங்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அடுத்து சிட்டஹாங் மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இங்குள்ள பண்டர்பன் பகுதியைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களில் வாழ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அரசின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மலை மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு படையினருடன் இணைந்து அப்பகுதி மக்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் மீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகளை எடுத்துச் செல்ல முடியாததால் ராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் பேரிடர் மீட்பு அமைச்சக செயலாளர் ஷா கமல் கூறும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவு படகுகள் மூலம் சென்றடைந்து வருகிறோம். கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டோம். பெரும்பாலான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது என தெரிவித்தார். அங்கு நிலவும் சூழலால் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.